தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களாக உள்ள நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த ‘தண்டேல்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி வெளியானது. ‘கார்த்திகேயா 2’ மூலம் புகழ்பெற்ற இயக்குனர் சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவு ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பன்னிவாஸ் மற்றும் அல்லு அரவிந்த் இப்படத்தை தயாரித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்காக இசையமைத்துள்ளார். 2019ம் ஆண்டு ஸ்ரீகாகுளம் பகுதியில் மீனவர்களைச் சுற்றி நடந்த உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளியான ஆறு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.86 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


தற்போது, திரையரங்குகளில் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், ‘தண்டேல்’ படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த நேரத்தில், நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியுடன் வந்த ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.