நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச்.வினோத் இணைந்து உருவாக்கும் புதிய படம் தற்காலிகமாக “தளபதி 69” என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு “நாளைய தீர்ப்பு” என பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் கதாநாயகனாக நடித்த முதல் படம் “நாளைய தீர்ப்பு” (1992) என்பதால், சென்டிமெண்டாக அந்த பெயரையே விஜய் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபரில் தொடங்கிய “தளபதி 69” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தகவலின் அடிப்படையில், “தளபதி 69” அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த படம் தீபாவளி (2025) அன்று திரைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள தகவல் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தொடங்கியுள்ள “தமிழக வெற்றிக் கழகம்” போட்டியிட உள்ளதனால், “தளபதி 69” விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2026 பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதே விஜய்க்கு தேர்தலுக்கு முன்னதாக நல்ல வரவேற்பை பெற உதவும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.இதேநேரம், குடியரசு தினத்தன்று (நாளை மறுநாள்) படத்தின் புதிய அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.