நடிகர் மட்டுமன்றி பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, அவர் தனது 50ஆவது படமான ‘ராயன்’ படத்தை தானே இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜூலை 26ஆம் தேதி படம் ரிலீசாகவிருக்கிறது.


இதற்கிடையில், ‘ராயன்’ தவிர, சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்துவரும் தனுஷ், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கிறார். அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படி நடிப்பில் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் தனுஷ்.

இச்சமயத்தில், பாலிவுட் படம் ஒன்றிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்குகிறார். இந்நிலையில், அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ட்ரிப்தி டிம்ரி நடிக்கவிருப்பதாகவும், விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக, ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘ராஞ்சனா’ படத்தில் தனுஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.