இயக்குனரும் நடிகருமான அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பின்னர் ‘செல்லமே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அந்த படம் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி வெளியானது, இப்போது அதற்கு 20 ஆண்டுகள் ஆகின்றன. விஷாலின் அறிமுகப் படமே ஒரு குறிப்பிடத்தக்க வெற்றிப் படமாக அமைந்தது. அதன்பின், அவர் நடித்த ‘சண்டக்கோழி’ படமும் ஒரு தரமான ஆக்ஷன் படமாக வெளியானது. தொடர்ச்சியாக அவர் ஆக்ஷன் படங்களிலேயே அதிகம் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் இவன்’ படம், விஷாலின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது.
கடந்த 20 ஆண்டுகளில், விஷால் நடித்த 30க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில், “பாண்டிய நாடு, துப்பறிவாளன், இரும்புத் திரை, மார்க் ஆண்டனி” போன்றவை குறிப்பிடத்தக்க முக்கியமான படங்களாகும். மேலும், சில படங்கள் தகுந்த ஆக்ஷன் படங்களாக இருந்தாலும், அவற்றுக்கு வெளியான போது எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் போனது. ஆனால், அந்தப் படங்கள் தற்போது டிவியில் ஒளிபரப்பப்படும் போது ரசிகர்கள் அதிகமாக ரசித்து வருவது ஆச்சரியமாக உள்ளது.
இந்த நீண்ட கால சினிமா பயணத்தில், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார். தற்போது சில முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் விஷால் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன, மற்றும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரவுள்ளன.