இயக்குனர் மணிரத்னம், ‘நாயகன்’ படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து, கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார். இதில் கமல்ஹாசனுடன் இணைந்து சிம்பு, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி, ராஜஸ்தான், புதுடெல்லி, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, படப்பிடிப்பு தளங்களில் இருந்து சில புகைப்படங்கள் கசிந்தன.இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் (செர்பியா) நடைபெற உள்ளது, இதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாண்டிச்சேரி படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் விபத்தில் சிக்கியுள்ளார். அதாவது ஆக்ஷன் காட்சிகள் படமாக்கும் போது, ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும்போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவர் ஓய்விற்காக கொச்சிக்கு திரும்பியுள்ளார். இந்த செய்தி அறிந்த ரசிகர்கள், ஜோஜு ஜார்ஜ் விரைவில் குணமடைய வேண்டும் என தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
