போலீஸ் துறையில் பணியாற்றிய பின்னர் சில காரணங்களால் முன்கூட்டியே ஓய்வு பெற்ற மம்முட்டி (டொமினிக்), தனியாக டிடெக்டிவ் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக இளம் வாலிபர் கோகுல் சுரேஷ் இணைகிறார். மம்முட்டி, வயதான பெண்மணி விஜி வெங்கடேஷின் வீட்டில் பேயிங் கெஸ்ட் ஆக தங்கி இருக்கிறார். ஒரு நாள் விஜி வெங்கடேஷ் மருத்துவமனையில் கண்டெடுத்த ஒரு லேடீஸ் பர்ஸை மம்முட்டியிடம் கொடுத்து, “இது யாருடையது என்பதை கண்டுபிடித்து உரியவரிடம் சேர்த்துவிடு. அதற்குப் பதிலாக எனக்கு தரவேண்டிய வாடகை பாக்கியை தர வேண்டாம்,” என கூறுகிறார்.
மம்முட்டி, அந்த பர்ஸில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பர்ஸை ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் பூஜாவுக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடிக்கிறார். பூஜாவை தேடி, அவர் தங்கியிருந்த முகவரிக்கு செல்லும் போது, கடந்த நான்கு நாட்களாக அதாவது பர்ஸ் தொலைந்த நாளிலிருந்து பூஜாவை காணவில்லை என்பதும், இரண்டு வருடங்களுக்கு முன்பே பிரேக்-அப் ஆன தனது காதலன் கார்த்திக்கை சந்திக்கச் சென்றதாக அவள் தோழிகள் கூறுகிறார்கள்.
இப்போது மம்முட்டி, அந்த கார்த்திக் யார் என்பதைக் கண்டறிய முயற்சிக்கிறார். ஆனால் பூஜா-கார்த்திக் பிரேக்-அப் ஆன நாளிலிருந்து இரண்டு வருடங்களாக கார்த்திக் மாயமானவர் என்பதும், அவரது ஒரே தங்கையான சுஷ்மிதா பட், தனது அண்ணனை வருகிறாரா என காத்திருப்பதும் தெரிய வருகிறது. இப்போது கேள்வி எழுகிறது: பூஜா, இரண்டு வருடங்களுக்கு பிறகு கார்த்திக்கை சந்திக்க ஏன் தேடிச் சென்றாள்? கார்த்திக் உயிருடன் இருக்கிறாரா? அவர் உயிருடன் இருந்தால் பூஜாவுக்கு என்ன ஆனது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பதே மீதிக் கதை.
போலீஸ் துப்பறியும் கதைகளில் அசரடிக்கும் அதிரடி காட்சிகள் மற்றும் சோடுபோகும் சண்டைக் காட்சிகள் இருக்கும். ஆனால் இந்த படம் தனியார் டிடெக்டிவின் புலனாய்வு கதை என்பதால் நிதானமாக நகர்கிறது. இதுவே படத்தை சீரான வேகத்தில் நகர்த்துவதில் முக்கிய காரணமாக உள்ளது. தொய்வின்றி தொடரும் சுவாரஸ்யம் பரபரப்பை நீட்டுகிறது.
மம்முட்டி தனது வயதுக்கேற்ப கதாபாத்திரத்தில் பக்குவத்துடன் நடித்துள்ளார். வாழ்க்கையின் ஏமாற்றங்களும், கோபமும், அவரது ஒவ்வொரு நடிப்பிலும் அழகாக வெளிப்படுகின்றன. சண்டைக் காட்சிகளிலும் பாடல்களிலும் இளமையானவராக மாறுகிறார். அவர் விசாரிக்கும் ஒவ்வொரு நபரையும் தனித்துவமான முறையில் கேள்வி கேட்பது சுவாரஸ்யத்தையும், காமெடிகளையும் கூட்டுகிறது. வழக்கில் கிடைத்த ஒரு சிறிய தகவலை வைத்தே அவர் முன்னேறுவது கதையின் விறுவிறுப்பை மேலும் உயர்த்துகிறது.
கோகுல் சுரேஷ், மம்முட்டியின் சிஷ்யனாக சிறப்பாக நடித்துள்ளார். அவரின் தோற்றம் அவரது தந்தை சுரேஷ் கோபியை சின்ன வயதில் பார்த்தது போலவே உள்ளது. படம் முழுவதும் மம்முட்டியுடன் இணைந்து பயணிப்பதால், கோகுலுக்கு இந்த படம் ரசிகர்களின் மனதில் தனது தனித்துவத்தை உணர்த்த ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இது அவரை தனியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க முயற்சிக்க அழுத்தமாக தள்ளுகிறது.
கதாநாயகியாக, காணாமல் போன கார்த்தியின் தங்கையாக நடித்துள்ள சுஷ்மிதா பட் தனது அழகாலும், நடிப்பாலும் கவர்ந்திழுக்கிறார். சில நேரங்களில் அவரது நடிப்பு செயற்கையாகத் தோன்றினாலும், படத்தின் கிளைமாக்ஸில் அதற்கு சரியான விடயம் விளக்கமடைகிறது. கிளைமாக்ஸில் அவர் எதிர்பாராத திருப்பத்தை ரசிகர்களுக்கு வழங்கி கணிசமாக அதிரவைக்கிறார்.விஜி வெங்கடேஷின் கதாபாத்திரம் தனித்துவமுடையது. தனது பர்ஸை உரியவரிடம் சேர்க்குமாறு மம்முட்டியிடம் வேண்டுகோள் வைக்கும் ஒரு தாயின் வலியை உணர்த்தும் விதத்தில் அந்தக் கதாபாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் கவுதம் மேனன் தனது பாணியில் படத்துக்கு ஆழத்தையும் புதிய முறையையும் கொடுத்துள்ளார். கதை எளிமையான புள்ளிகளிலிருந்து தொடங்கி எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிறது. குறிப்பாக, இடைவேளைக்கு முன்பே ஒரு சண்டைக் காட்சி முடிந்து விட்டதாக எண்ணிய ரசிகர்களை இடைவேளைக்கு பிறகு அதே காட்சியுடன் மீண்டும் இணைத்து ஆச்சரியப்படுத்துகிறார். இந்த சண்டைக் காட்சி கவுதம் மேனனின் கைவண்ணத்தைக் காட்டுகிறது. மொத்தத்தில், படம், நிதானமான கட்டமைப்புடன் பரபரப்பான அனுபவத்தை தருகிறது.