‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, நடிகை ருக்மிணி வசந்த் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தற்போது அவர் பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ ஆகும். இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய ருக்மிணி வசந்த், ‘டாக்ஸிக்’ படத்தில் நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார்.
அவர் கூறியதாவது: நாம் இதுவரை இந்திய சினிமாவில் பார்த்த எந்தப் படத்தையும் போல் இல்லாமல், இந்த ‘டாக்ஸிக்’ திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும், என்று தெரிவித்துள்ளார். ருக்மிணி வசந்தின் இந்த அப்டேட், படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.இந்த திரைப்படம், 2026 மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

