சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. உலகம் முழுவதும் பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புக்கிங் தற்போதே நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் சூர்யா அளித்த ஒரு பேட்டியில், “ஜோதிகாவுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை இன்னும் கனவாகவே உள்ளது. அது விரைவில் நனவாகும் என நான் எதிர்பார்க்கிறேன். ஒரே நேரத்தில் நாங்கள் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தானாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த இயக்குனரிடத்திலும் எங்களுக்கேற்ற கதையை உருவாக்குங்கள் என்று நானே சொல்ல மாட்டேன்,” என்று அவர் கூறினார்.

மேலும், திருமணத்திற்கு முன்பு சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.