லஸ் சர்ச் சாலையில் உள்ள போக்குவரத்துத் தீவுக்கு புதிதாக ‘இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்துத் தீவு’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இதற்கான பெயர்ப்பலகையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள வார்டு-123 லஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகே அமைந்துள்ள இந்த போக்குவரத்துத் தீவுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி அந்த பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது, அப்போது பெயர்ப்பலகையை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, தென் சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.