‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் ‘மகாராஜா’ படத்தை ‘குரங்கு பொம்மை’ இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இதில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் சுப்ரமணியம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனேஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் கூறியதாவது: “கடந்த 14 வருடங்களாக என் மனதில் இருந்த கதை இது. 14 முறை இந்த கதையை திருத்தி மாற்றியுள்ளேன். இந்த படம் ஆரம்பிக்கும்போது, இது விஜய் சேதுபதியின் 50வது படமாக இல்லை. அதேச்சையாக அமைந்தது. இதனால் படத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வந்தது.
படத்தின் டிரைலரில் விஜய் சேதுபதி தேடும் லட்சுமி யார் என்பதை ரகசியமாக வைத்திருப்போம். படம் வெளிவரும்போது அது தெரியவரும். படத்தில் பாரதிராஜா, அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவருமே எனக்கு பிடித்த நடிகர்கள் என்பதால் அவர்களை இந்த படத்தில் இணைத்தேன். படப்பிடிப்பு காலத்தில் இவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.

படத்தில் விஜய் சேதுபதி சலூன் கடை நடத்தும் எளிய மனிதராக நடிக்கிறார். சமூகம் அவரை கலைத்து விடுகிறது. தன்னை தேடி அவர் ஓடுகிறார். விடைகளை அவர் கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் கதைக்களம். ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பதே படம் சொல்லும் செய்தி.

படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். சில காட்சிகளில் அதிக வன்முறை இருப்பதால் அவற்றை நீக்கி, சில காட்சிகளின் நீளத்தை குறைத்தோம். இதனால் கதைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றுள்ளார்.
