லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சாகிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் அமீர்கானும் நடித்துள்ளார். ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கைதி படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜூக்கு போன் செய்து நேரில் அழைத்திருந்தேன்.எனக்கு ஏதாவது கதை உள்ளதா? என கேட்டேன். உங்களுக்கு இல்லாத கதையா சார்… இருக்கு ஆனால் நான் கமல் ரசிகன் சார் என்றார். அதாவது என்னிடம் மறைமுகமாக சொல்கிறாராம்… பஞ்ச் டயலாக் எல்லாம் இல்லை இன்டெலிஜென்ஸாக நடிக்க வேண்டும் என… இந்த இடைவெளியில் கமல்-ஐ வைத்து விக்ரம் படத்தை முடித்து விட்டார். இந்த தடவை விடுவதாக இல்லை என்னிடம் கதை சொல்ல வந்தார். பக்காவான வில்லன் கேரக்டர் என்றார் உடனடியாக ஓகே சொன்னேன். முதலில் ‘தேவா’ என்றார். பின்னர் திடீரென கதையை மாற்றி ‘கூலி’ என்றார். டபுள் ஓகே என்றேன். முக்கியமான நடிகர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என என்னிடம் லோகேஷ் கனகராஜ் சொன்னார். அடேங்கப்பா கமல்ஹாசனை பிடித்து விட்டார்களோ என ஆச்சரியப்பட்டு ஆஹா சூப்பர் என கனவில் மிதந்தேன். உடனே அமீர்கான் என்றவுடன் மேலும் ஆச்சரியப்பட்டேன். காரணம் அவர் ஒரு கதையை ஓகே செய்யவே 2 ஆண்டுகள் ஆகும். இங்கு கமல் எப்படியோ அதேபோல் வட இந்தியாவில் அமீர்கான்.
லோகேஷ் கனகராஜ் 2 மணி நேரத்திற்கு ஒரு பேட்டிக் கொடுத்திருக்காரு. அத உட்கார்ந்து பார்த்தேன் முடியல… படுத்திருந்து பார்த்தேன், முடியல… தூங்கி எழுந்து பார்த்தேன் அப்பவும் முடியல… கூலி திரைப்படத்தின் உண்மையான ஹீரோ லோகேஷ் கனகராஜ் தான். இந்த படத்துக்கு வானத்தின் அளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது. எனக்கும் நடிகர் சத்யராஜூக்கும் எங்கள் கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவர் மனதில் பட்டதை சொல்லிவிடுவார். மனதில் பட்டதை சொல்லுபவர்களை நம்பலாம். ஆனால், மனதுக்குள்ளேயே வைத்திருப்பவர்களை நம்ப முடியாது.
நாகர்ஜூனாவுக்கு ஸ்கின் கலர் எவ்வளவு நன்றாக உள்ளது. ஆனால் எனக்கு முடிகூடப் போய்விட்டது. இதெல்லாம் எப்படி என அவரிடம் கேட்டால் ‘உடற்பயிற்சி’ என்று சொல்கிறார். ‘எத்தனை நாள்தான் நானும் நல்லவனாகவே நடிக்கிறது’ என வெங்கட் பிரபு அஜித்துக்கு ஒரு வசனம் எழுதியிருப்பார் அதே மாதிரிதான் நாகர்ஜுனா இப்படத்தில் வில்லன் ரோலில் நடித்துள்ளார். ஸ்ருதிஹாசனும் இப்படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். நான் கமல்ஹாசனின் பொண்ணுடா என்று சொல்லும்படி அவர் நடிப்பு அமைந்திருக்கிறது.
படத்தின் முதல் காட்சியை ஒரு பிணத்துக்கு மாலை போடுவது போல எடுத்தார்கள். வெலவெலத்து போனேன். இப்படி ஒரு படத்தை, இப்படி ஒரு இயக்குனரை நான் பார்த்ததே இல்லை. இந்த படத்தில் சாண்டி மாஸ்டர் தலைவா தூள் கிளப்பிடலாம் என்று சொல்லி என்கிட்ட வந்தார். நான் அவரிடம் அய்யா நான் 1950 மாடல், லட்சம் கிலோமீட்டர் ஓடி இருக்கிறேன். பார்ட் எல்லாம் உடலில் மாற்றி இருக்கிறார்கள். எனவே, என்னை பார்த்து ஆட வையுங்கள் என டான்ஸ் மாஸ்டரிடம் கூறினேன். கூலி படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவத்தை கொடுக்கும்.
நான் கூலியாக இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். என்னை சின்ன வயதில் படித்து ஆளாக வேண்டும் என்று என் அண்ணன் எவ்வளவோ கனவு கண்டார். கஷ்டப்பட்டு உழைத்து என்னை தனியார் கல்லூரியில் சேர்த்தார் நான் நிச்சயமாக படிக்க மாட்டேன் என்பது எனக்கே தெரியும். கல்லூரி தேர்வு கட்டணமாக என் அண்ணன் எனக்கு கொடுத்த ரூ.120 உடன் சென்னைக்கு ஓடி வந்தவன் நான். நடிகனாக இல்லை ஒரு லைட் மேன் ஆவது ஆகிவிட வேண்டும் என்பதுதான் என் கனவு. அந்த அளவு சினிமாவை ரசித்தவன் நான். ஆனால் எதுவும் நடக்கவில்லை மறுபடியும் வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்பினேன்.
யாரும் திட்டவில்லை. எனக்கு தெரிந்த இடத்தில் கூலிக்கு மூட்டை தூக்க செல்ல வேண்டும் என்று அப்பா சொன்னார். சரி என்று சென்றேன் 100 கிலோ கொண்ட ஒரு அரிசி மூட்டையை தூக்கி இறக்கினால் பத்து பைசா கூலி. எடை பார்த்து வாடிக்கையாளர்கள் கொண்டு சேர்த்து விட்டால் 50 பைசா கிடைக்கும். அருகில் உள்ள கடைகளுக்கு கொண்டு செல்லும் பட்சத்தில் 50 மூட்டைகளுக்கு ஐந்து ரூபாய் கூலி. இந்த பையன் சம்பாதிக்கட்டுமே என்று அங்கிருந்தவர்களும் எனக்கு உதவி செய்தார்கள். அங்கும் பலர் தமிழர்கள் தான்.
ஒரு தடவை பத்து ரூபாய் கூலிக்கு ஆசைப்பட்டு அருகில் உள்ள கடைக்கு அரிசி மூட்டையை கொண்டு சென்றேன். ஆனால் என் நேரம் அந்தப் பகுதியில் ஒரு விபத்து ஏற்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. நான் மூட்டை இழுத்து சென்ற வாகனமும் சரியில்லை. படாதபாடு பட்டு போனேன். அப்போது என்னுடன் சரோஜா என்ற பூக்கிரண்டு எனக்கு உதவி செய்து அந்த பத்து ரூபாய் கூலி கிடைக்க செய்தார். அடுத்த தடவை லோடு ஏற்றிச் செல்லும்போது கல்லூரியில் படித்த சக நண்பன் ஒருவனிடத்தில் சென்று விட்டேன். அவன் எனக்கு இரண்டு ரூபாய் டிப்ஸ் கொடுத்தான். என்ன ஆட்டம் ஆடினடா நீ.. ஆனால் இன்று.. என நக்கல் செய்தான். வாழ்க்கையில் முதல்முறையாக அப்படியே உட்கார்ந்து அழுதுவிட்டேன். எல்லோரும் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று என்னை பாராட்டுகிறார்கள்.
உழைப்புக்கு மேல் என் வெற்றிக்கு ஒரு ரகசியம் உண்டு. அதுதான் அந்த இறைவனின் குரல். இறைவனின் குரலையும் உங்கள் குரலையும் பிரித்துப்பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியில் கவுரவம் இல்லை என்றால் எதுவுமே இல்லை.நான் முடிந்த அளவு இறைவனின் குரலைக் கேட்டு நடந்து கொண்டிருக்கிறேன். அதனால் நானும் நன்றாக இருக்கிறேன் என்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்கிறார்கள். என் கஷ்டத்தில் துணை நின்ற உங்களுக்கும், இந்த கெட்ட பையனை கல்யாணம் செஞ்சுக்கிட்டு படாத பாடு தட்டுவதும் என் மனைவிக்கும் என் அன்பான குழந்தைகளுக்கும் நன்றி என் பிள்ளைகளுக்கு ஒரு அப்பாவாக எனது கடமைகளை சரியாக செய்யவில்லை இருந்தாலும் அவருடைய காட்டும் அன்புக்கு நன்றி. இப்படி அனைவரது ஆசிர்வாதத்தாலும் நான் நன்றாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.