குட்நைட் மற்றும் லவ்வர் திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த மணிகண்டனின் அடுத்த படம் குடும்பஸ்தன், வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் மணிகண்டன் உடன் சான்வே மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வைசாக் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுஜித் என் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி கூறியதாவது, குடும்பஸ்தன் எனும் இந்தக் கதை என் சொந்த அனுபவத்தில் இருந்து உருவாகியது. நான் மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதத் தொடங்கிய போது, அது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. படத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் பார்வையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் காண்பார்கள்.
குடும்ப வாழ்க்கை என்பது பொறுப்புகளுடன் கூடிய ஒரு ஆனந்தமான அனுபவமாகும். இப்படத்தின் கதாநாயகன் திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்குடன் பதிவு செய்துள்ளோம். மணிகண்டன், பக்கத்து வீட்டுப் பையன் போலவே தோற்றமளித்து தனது தேர்ந்த நடிப்பால் பார்வையாளர்களை வெகுவாக கவர்வார். தனது நூறு சதவிகித உழைப்பையும் இந்தப் படத்தில் செலுத்தியுள்ளார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமாருக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். குடும்பஸ்தன், குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் சிரிப்பையும் கொண்ட ஒரு அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்,” என்றார் இயக்குநர்.