வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி கவனம் பெற்றவர் நடிகை பவானிஸ்ரீ. இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷின் தங்கையான இவர், தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். இதற்கிடையே, ஒரு பேட்டியில் சினிமாவில் உள்ள “அட்ஜஸ்ட்மெண்ட்” விவகாரத்தைப் பற்றி திறந்தவெளியாக கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் கூறியதாவது, “நான் தனிப்பட்ட முறையில் இதுபோன்ற சூழ்நிலையை சந்திக்கவில்லை. ஆனால் சில பெண்களின் பயம் மற்றும் தயக்கம் தான், சிலரின் தவறான செயல்களுக்கு ஒரு காரணமாகவும் அமைகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க ‘மீடூ’ போன்ற அமைப்புகள் உள்ளன. யாராவது தவறாக அணுகினால், அதை வெளிக்கொண்டு வந்தால் போதுமானது. அதன் மூலம் அந்தச் சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை.
இப்போது நல்ல உள்ளடக்கமுள்ள கதைகளுக்கே மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். கமர்ஷியல் படங்களாக இருந்தாலும், கதை இருந்தால்தான் அது மக்கள் விருப்பத்திற்கு உரியதாக இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. வெறும் கிளாமரை நம்பி எதுவும் நடக்கவில்லை. கிளாமர் பற்றிய அணுகுமுறையில் மாற்றம் உருவாகி வருகிறது. அதனால், கிளாமர் இல்லாமலும் வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்” என்றார்.