நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வசூலைக் குவித்த படம் ‘ஜெயிலர்’. அந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும் தமன்னாவின் ஒரே ஒரு நடனம் இளம் ரசிகர்கள் மத்தியில் இணையில்லா வரவேற்பைப் பெற்றது. ‘காவாலய்யா’ என கையை வளைத்து, நெளித்து, அழைத்து அவர் ஆடிய நடன அசைவுகள் அந்தப் படத்திற்கே ஒரு அடையாளமாக திகழ்ந்தது. அப்பாடலின் ‘லிரிக்’ வீடியோ 244 மில்லியன் பார்வைகளையும், முழு வீடியோ பாடல் 220 மில்லியன் பார்வைகளையும் யு டியூபில் இதுவரையில் பெற்றுள்ளது.
அந்தப் பாடலை மிஞ்சும் விதத்தில் தமன்னாவின் அடுத்த அதிரடி ஆட்டம் ஒன்றை ‘ஸ்திரீ 2’ ஹிந்திப் படத்தில் இடம் பெற்றுள்ளது. ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு தமன்னா கிளாமராக நடனமாடியுள்ளார். நேற்று யு டியுப் தளத்தில் வெளியான அந்தப் பாடலின் படமாக்கம், தமன்னாவின் அசத்தலான நடனம் ஆகியவை ரசிகர்களை உடனடியாகக் கவர்ந்துவிட்டது. அதற்குள் 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது. ‘காவாலய்யா’ பாடலின் யூடியுப் சாதனையை இந்தப் பாடல் கடக்குமா என்பது போகப் போகத் தெரியும்.
அமர் கவுஷிக் இயக்கத்தில், சச்சின் ஜிகர் பாடல்கள் இசையமைப்பில், ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தமன்னா கவர்ச்சி நடனமாடியுள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.