ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் “பீனிக்ஸ்” படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்பா பெயரை பயன்படுத்தாமல் சூர்யா என்கிற பெயருடன் முதல் படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்த சூர்யா சேதுபதி, இப்பொழுது புரமோஷனுக்கு அப்பா ஏன் வந்தார் என பத்திரிகையாளர்கள் கேட்ட போது பதிலளித்தார்.
நடிகர் சூர்யா ஏற்கனவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நிலையில், நீங்கள் சூர்யா என்கிற பெயரில் அறிமுகமானால் குழப்பம் வராதா என கேட்டபோது, அந்த முடிவை எடுத்துவிட்டேன். நீங்கள் எப்படியும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா என்றே எழுதுவீர்கள், அதனாலே அந்த பெயரையே வைத்திருக்கலாம் என அவர் கூறினார்.பீனிக்ஸ் படத்தின் பூஜைக்கு விஜய் சேதுபதி பங்கேற்காத நிலையில், டீசர் வெளியீட்டு விழாவுக்கு மட்டும் அவரை அழைத்தது ஏன் என கேட்டபோது, இன்று தந்தையர் தினம் என்பதால் அவரை அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்தேன் என சூர்யா கூறினார்.


அப்பா பெயரை பயன்படுத்த மாட்டேன் என்றும், அவர் வேறு நான் வேறு என்றும் கூறிய சூர்யா சேதுபதி, இதனால் ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தது பற்றி பெரியவர்களுக்கே ட்ரோல்கள் குவிகின்றன, நான் எம்மாத்திரம் என பதிலளித்தார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்தது பற்றியும் அவர் பேசினார். முன்னதாக நிகழ்ச்சியில் மகன் குறித்து பேசும்போது, எமோஷனலாகி விஜய் சேதுபதியும் பல விஷயங்களை கூறியுள்ளார். சூர்யா என்கிற பெயரில் தான் தொடர்வேன் என சூர்யா சேதுபதி அறிவித்தார். சண்டைக் காட்சிகளில் ஸ்டன்ட் மேன்களுக்கு உண்மையிலேயே அடிபட்டதை பார்த்தபோது, ஒவ்வொரு படத்துக்கும் அவர்கள் கொடுக்கும் உழைப்பு பெரியது என புரிந்துகொண்டேன் என கூறினார்.