இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கிய ‘மின்மினி’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஹலிதா ஷமீமின் முந்தைய படைப்புகளான ‘பூவரசம் பீப்பி’, ‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ மற்றும் ‘லோனர்ஸ்’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதால் ‘மின்மினி’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக எட்டு வருடங்களாக காத்திருந்து ‘மின்மினி’ திரைப்படத்தை எடுத்துள்ளனர். இதில், எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கெளரவ் காளை, பிரவின் மற்றும் கெளரவ் ஆகியோர் முதன்மை நடிகர்களாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆங்கர் பே ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார். நீண்ட காலமாக தயாரிப்பிலிருந்த இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இன்று வெளியிட்டுள்ளனர். இமயமலைக்குச் சென்று எடுக்கப்பட்ட காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. ‘மின்மினி’ ஆகஸ்ட் 9ம் தேதி திரைக்கு வருகிறது.