பொன்னம்பலம் 90களில் தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லனாக இருந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்தவர். ஒரு கட்டத்தில் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். காரணம் உடல்நலம் சரியில்லாமல் இருந்தநிலையில் அவருக்கு கடனும் இருந்துள்ளது. அந்த கடனை எப்படி அடைத்தார் என்பதை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், “செந்தூரப்பாண்டி படத்தின் கதையை கேட்க எஸ்.ஏ.சி ஆபிசுக்கு சென்றேன். என் கேரக்டர், கதை, பட்ஜெட் பற்றிய விவரங்களை சொல்லிய அவர் சம்பளம் சரி என்றால் படம் பண்ணலாம் என்றார். அப்பொழுது வேலை இல்லாமல் ஒரு வருடம் இருந்தேன். 50,000 கொடுத்தாலே போதும் என்ற நிலைமை இருந்தது.அப்போது எனக்கு கொஞ்சம் கடன் இருந்தது. அதனை அடைத்தால் போதும் என்றேன். ஆனால் எஸ்.ஏ.சி, ‘எதுவும் பேசக்கூடாது. நான் சொல்கிறேனே அதுதான் சம்பளம். என்னை பற்றி வெளியே கேட்டுக்கொள்ளுங்கள். சொன்னதை சரியாக கொடுத்துவிடுவேன். விஜயகாந்த் உன்னை நடிக்கச் சொல்லியிருக்கிறார்’ என செக் கொடுத்தார்.

விஜயகாந்த் சொன்னதும், படத்தில் மெயின் வில்லனாக நடிக்க சொல்லியதால் ஒகேதான் என்றேன். அவர், ‘கவரை இங்கே வைத்து பிரித்து பார்க்காதே. தொகையால் மனஸ்தாபம் வரலாம். வீட்டுக்கு சென்று பிரித்து பார்’ என்றார். வீட்டுக்கு வந்து 4 நாட்கள் கழித்து கவரை பிரித்தேன். ஒரு லட்சம் ரூபாய் அதுவும் அட்வான்ஸ் என எழுதியிருந்து. சம்பளம் 2.75 லட்சம் இதை வைத்து என் கடன்கள் அனைத்தையும் அடைத்தேன்” என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.