பிக்பாஸ் போட்டியாளராக அறியப்படும் நடிகை சனம் ஷெட்டி, சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் குழுவைச் சேர்ந்தவர்கள் இன்று காலை தன்னை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, “உங்கள் நம்பரிலிருந்து பல பாலியல் மிரட்டல்கள் வந்துள்ளன. 25க்கும் மேற்பட்ட புகார்கள் உங்கள்மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் விரைவில் கைது செய்யப்படுவீர்கள்,” என அவர்கள் மிரட்டினார்கள்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000064712-949x1024.png)
மேலும், “உங்களுடைய முழு தகவல்களையும் உடனடியாக வழங்காவிட்டால், உங்கள் சிம் கார்டு முடக்கப்படும்,” என்றும் தெரிவித்தனர். இதனால், “சிம் கார்டு வாங்கும் போது நம்முடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளோம். அப்படி இருக்கும்போது, எதற்காக இப்போது அந்த விவரங்களை கேட்கிறார்கள்?” என்ற சந்தேகம் எனக்கு எழுந்து, அந்த கால் பண்ணியதை நிறுத்திவிட்டேன்.
இதுபோன்ற ஒரு சம்பவம் என் அறிமுகமான ஒருவருக்கும் நடந்தது, அப்போது அவர் அனுப்பிய லிங்கை கிளிக் செய்ததால், அவரது போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று கூறினார் சனம் ஷெட்டி. இதுபோன்று யாராவது மர்ம நபர்கள் கால் பண்ணினால், அவ்வாறு கேட்கப்படும் எந்த தகவலையும் வழங்கக்கூடாது என்றும், அவர்கள் அனுப்பும் லிங்கை யாரும் கிளிக் செய்யக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார். “அப்படி கிளிக் செய்தால், நமது போன் ஹேக் செய்யப்பட்டு, பேங்க் தகவல்கள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டு, மோசடி செய்யப்படும்,” என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவர் அந்த வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.