மலையாளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது முதல் திரைப்படமாக டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற படத்தை கடந்த வாரம் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திடாவிட்டாலும், நேர்மறையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படம் துப்பறியும் கதையம்சத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதில் திருப்புமுனைக்கு முக்கிய காரணமாக அமையும் நெகட்டிவ் சாயலுடைய ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் வினீத் நடித்திருந்தார். தமிழ் ரசிகர்களுக்கு காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் பரிச்சயமான வினீத், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் மூலம் திரையுலகில் தன்னுடைய இருப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துவந்த வினீத், இந்த படத்திலும் முக்கியமான ஒரு ரோலில் நடித்துள்ளார். கவுதம் மேனன் இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு பிரபலமான நடிகரை தேர்வு செய்ய விரும்பியபோது, அவருக்காக நேரடியாக மம்முட்டி தான் வினீத் பெயரை பரிந்துரைத்ததாக, சமீபத்திய பேட்டியில் வினீத் தெரிவித்துள்ளார்.
“கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பது எனக்கு ஒரு நீண்டநாள் கனவு. பொதுவாக எனக்கு வரும் படங்களின் கதையை முழுமையாக கேட்ட பிறகே ஒப்புக்கொள்வேன். ஆனால், இது கவுதம் மேனன் படம் என்பதால் ஒரு கணம் கூட யோசிக்காமல் உடனே சம்மதித்தேன். அதோடு மம்முட்டி நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பது கூட இன்னொரு முக்கிய காரணம்” என நடிகர் வினீத் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.