ரோஜா கூட்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், பார்த்திபன் கனவு, போஸ், நண்பன் போன்ற பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக அவர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், தற்போது தினசரி என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோயின் குறித்து வந்த விமர்சனங்களுக்கு அவர் தக்க பதிலளித்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து கடந்த மாதம் தேடி தேடி நான் கண்டேன் என்ற பாடல் வெளியானது. அந்த பாடலைக் கேட்டு, சமூக வலைதளங்களில் சிலர், ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு போன்ற பெரிய படங்களில் நடித்த ஸ்ரீகாந்த் இப்போது இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டாரா என்று கடுமையாக விமர்சித்தனர். அதற்கு மேலாக, அந்த படத்தின் ஹீரோயினையும் கடுமையாக விமர்சனை செய்தனர்.

இதுகுறித்து நடிகர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவிக்கும்போது, “தயவுசெய்து பாகுபாடு பார்ப்பதை நிறுத்துங்கள். நம் மனங்களில் இனவெறி அதிகமாக உள்ளது, நாம் இனவெறி பிடித்தவர்களாக மாறிவிட்டோம். மற்றவர்களை உடல் தோற்றத்தின் அடிப்படையில் விமர்சித்து மகிழ்வது மிகவும் மோசமான செயல். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். எனக்கு தெரிந்த அளவில், மக்கள் அனைவரிடமும் அன்பு குறைந்து வருகிறது. ஒருவருக்கு ஒருவர் கொஞ்சம் அன்பை வெளிப்படுத்தினால் நம் சமூகம் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.மேலும், “நான் சமூக வலைதளங்களில் இல்லை. 16 வருடங்களுக்கு முன்பே அதிலிருந்து விலகிவிட்டேன். எனவே என்னைப் பற்றியதை எந்த விதமாக எழுதினாலும் அது என்னைக் காயப்படுத்தாது,” என ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.