இணையத் தொடர்கள் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானவர் ஐதராபாத்தைச் சேர்ந்த பட்டதாரி ஸ்ரீ கவுரி பிரியா. ‘இவ பந்தைய புறா’ பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளார்.சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசியபோது, “என் குடும்பத்தில் நானும் அப்பாவும் மட்டும்தான். ஒரே பெண் என்பதால் அப்பா என்மீது மிகுந்த பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார். பள்ளிப்படிப்பின் போது கிளாசிக்கல் இசையை கற்று கொண்டிருந்தேன். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றேன்.
ஐதராபாத்தில் கல்லூரியில் படிக்கும்போது, 2018ல் அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் ஐதராபாத் விருதை வென்றேன். இது புதிய வாழ்க்கைப் பயணத்தை தந்தது, ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.எல்லோரையும் போல கொரோனா என்னை வீட்டிலேயே முடக்கியது. இருந்தாலும் நான் சும்மா இருக்கவில்லை. தெலுங்கில் ‘ரைட்டர் பத்ம பூஷன்’, ‘மெயில்’ போன்ற இணையத் தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றேன். அடுத்து ‘மேட்’ எனும் தெலுங்கு இணையத் தொடரில் நடித்து, இது கல்லூரி நண்பர்களின் கதையாதலால் இளைஞர்களிடையே ஆதரவு பெற்றது.இவ்வாறு வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தபோது, தமிழில் ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற இணையத் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் ‘லாலாகுண்ட பொம்மை’ எபிசோடில் ‘அவ பந்தைய புறா’ என்ற பாடல் வந்தது. அது தமிழ் ரசிகர்களிடையே வைரலானது.
இதனால் புதிய அங்கீகாரம் கிடைத்தது. தமிழ் மக்கள் எனக்கு இவ்வளவு ஆதரவு கொடுப்பார்கள் என நான் நம்பவே இல்லை. வெளியில் சென்றாலும் என்னை அடையாளம் கண்டுபிடித்து பாசம் காட்டுகின்றனர்.புதிய உறவாக இருந்தது. அதன் பிறகு நடிகர் மணிகண்டனுடன் ஹீரோயினாக ‘லவ்வர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அதிக வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். ‘லவ்வர்’ படப்பிடிப்பில் எனக்கு தமிழ் அதிகம் பேச வரவில்லை. மணிகண்டன் மற்றும் இயக்குநர்கள் உதவியது மறக்க முடியாத நினைவாக இருக்கிறது,” என்றார்.