சமீபத்தில் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்திருந்த அமலா பால் கர்ப்பமாக இருந்த காரணத்தால் திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து வந்தார். இதையடுத்து தற்போது மீண்டும் படங்களில் கமிட்டாகி நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் மலையாளத்தில் அர்ஃபாஸ் அயூப் இயக்கத்தில் ஆசிப் அலியுடன் ‘Level Cross’ எனும் படத்தில் நடித்திருக்கிறார். வரும் ஜூலை 26ம் தேதி இன்று வெளியாகியுள்ளது.

இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அமலா பால், ஆசிப் அலி இருவரும் கேரளாவின் எர்ணாகுளத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றுக்குச் சென்றிருந்தார்கள். அங்கு மாணவர்களுடன் ஜாலியாக உரையாடியிருந்தார் அமலா பால். இதுதொடர்பான காணொலிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.


இந்நிலையில் அமலா பால் அணிந்திருந்த ஆடை கவர்ச்சியாக இருக்கிறது என்றும் மாணவர்களிடமிருந்து இது தவறான உதாரணமாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி அதைச் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கினர். இதற்குப் பதிலளித்த அமலா பால் பத்திரிக்கையாளர் சந்திப்பில், “நான் எனக்கு வசதியாக இருக்கும் விருப்பமான உடையை அணிகிறேன். இதில் என்ன பிரச்னை இருக்கிறது? எப்படிப்பட்ட உடையை அணிய வேண்டும் என்று ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை.

நான் பாரம்பரிய உடைகளான சேலையையும் அணிகிறேன், நவீன உடைகளையும் அணிகிறேன். உங்கள் பார்வையையும், கேமராவையும் சரியாக வைத்தால் எந்தப் பிரச்னையுமில்லை. தவறு பார்ப்பவர்களிடம்தான் இருக்கிறது, என்னிடமில்லை. கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் இப்படி உடை அணிந்ததைத் தவறு என்று கூறுகிறார்கள். ஆனால், இதன் மூலம் நான் மாணவர்களுக்குச் சொல்லும் செய்தி, ‘உங்களுக்கு வசதியான ஆடையை நீங்கள் அணியுங்கள்’ என்பதுதான். இப்படி ஏன் அதை எடுத்துக் கொள்ளக்கூடாது. நான் அணிந்த ஆடை மாணவர்களுக்குத் தவறாகப் படவில்லை. அவர்களுக்கு அதில் எந்தப் பிரச்னையுமில்லை. தவறாகப் பார்ப்பவர்களிடம்தான் பிரச்னையிருக்கிறது” என்று கூறியுள்ளார்.