“ஹனுமான்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கி வருகிற புதிய படம் “சிம்பா”. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்சக்னா நந்தமூரி நடிகராக அறிமுகமாகிறார். “ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸ்” என்ற மாபெரும் உலகத்தின் ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இப்படத்தை லெஜண்ட் புரொடக்ஷன் மற்றும் எஸ்எல்வி சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றன.

சமீப நாட்களில், “சிம்பா” படம் தொடர்பான எந்தப் புதிய தகவல்களும் வெளியிடப்படாததால், இந்தப் படம் கைவிடப்பட்டதாக வதந்தி இணையத்தில் பரவியது. இதற்குப் பதிலளிக்க தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டு, அந்த வதந்திகளை முற்றிலும் மறுத்துள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டதாவது, பிரசாந்த் வர்மா மற்றும் மோக்சக்னா நந்தமூரி ஆகியோரின் “சிம்பா” படம் குறித்து பரவி வரும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். இப்படம் தொடர்பாக ஆதாரமற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அவை உண்மையல்ல. படத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களும் எங்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்கள் மூலம் மட்டுமே பகிரப்படும். அதுவரை, தவறான தகவல்களை பகிர்வதை தவிர்க்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி. என்று குறிப்பிட்டுள்ளனர்.