பல மலையாள நடிகர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறி விடுகிறார்கள். இந்த வரிசையில் தற்போது சேர்ந்துள்ளார் ஜோஜூ ஜார்ஜ். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான இவர், ஜோசப், பட்டாளம், தட்டயன் மறையத்து, ஹோட்டல் கலிபோர்னியா, புலிமடா, நேரம், ரெட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ‘ஜெகமே தந்திரம்’ மூலம் அறிமுகமான இவர், ‘புத்தம் புது காலை விடியாதா’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது கமலின் ‘தக்ஸ் லைப்’ படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், ஜோஜூ ஜார்ஜ் இயக்குனராக களம் இறங்குகிறார். அவரின் முதல் படத்திற்கு ‘பனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. திருச்சூரில் இரண்டு கும்பல்களுக்கு இடையே நடைபெறும் போட்டியை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. அபிநயா, சாகர் சூர்யா, ஜுனைஸ் வி.பி., ஜிண்டோ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர்களாக விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி.எஸ். பணியாற்றுகின்றனர்.
இந்த படம் விரைவில் வெளிவருவதற்கு தயாராக இருக்க, மலையாளத்தில் தற்போது நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜோஜூ ஜார்ஜ், அபிநயா உள்ளிட்ட படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது ஜோஜூ ஜார்ஜ் பேசுகையில், “இவரை முதன்முதலாக பார்த்தவுடன், இந்த கதாபாத்திரத்திற்கு இவரே சரியானவர் என்று முடிவு செய்தேன். ஆனால் அவர் சவால்களை எப்படி சமாளிக்கப் போகிறார் என்கிற கேள்வி இருந்தது.
ஆனால், இவரை வைத்து படம் இயக்கிய ஒரு இயக்குனரை சந்திக்க நேர்ந்தபோது, அபிநயாவுக்கு ஆங்கிலத்தில் வசனங்களை கொடுத்தால் அவர் பிரமாதமாக நடிப்பார் என்று அவர் கூறினார். படப்பிடிப்பில் அதை அனுபவத்தால் உணர முடிந்தது. அதே போல், நடனத்திலும் அவர் என்ன செய்யப் போகிறார் என்று நினைத்தேன், அதிலும் அசத்தியுள்ளார்” என்று அபிநயாவை பாராட்டினார்.