இயக்குனர் பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய பார்த்திபன், நான் என்னைத்தவிர யாரிடத்திலும் எதையும் எதிர்பார்க்கவில்லை, அதனால் தான் நான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிறேன். அதனால் தான் நான் ரொம்ப கஷ்டத்தை அனுபவிக்கிறேன். என்னை நானே உடைச்சி, என்னை நானே வருந்தி, என்னை நானே உருவாக்கிக் கொள்கிறேன். யாரோ ஒருத்தர் எனக்கு கால்ஷீட் கொடுத்துத்தான் நான் மேல வரவேண்டும் என்று இருந்தால் என்னால் வளர்ந்து இருக்கவே முடியாது.
பல இயக்குநர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அப்படியே பின் தங்கி போய்விடுகிறார்கள். பத்து வருடத்திற்கு மேல் காத்திருப்பர், அவர் பல நடிகர்களை வைத்து படத்தை இயக்கி இருப்பர். ஆனால் அவர்கள் பெரிய ஸ்டாராகி விடுவார்கள். ஆனால், இயக்குநர்கள் அதே இடத்தில் இருப்பார்கள். மறுபடியும் தன்னை வளர்த்துவிட்ட இயக்குநர்களுடன் மீண்டும் சேரவே மாட்டார்கள். ஆனால், இயக்குநர்கள் மட்டும் இலவு காத்த கிளிபோல அவர்களுக்காக காத்திருப்பார்கள், என்னைக்காவது ஒரு நாள் ஒரு வாய்ப்பு கொடு என்று காத்துக்கொண்டு இருப்பார்கள். அது இன்னும் அதிக வலியைத் தரக்கூடிய விஷயம், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “உலகத்தில் பணத்தை விட நிறைய இருக்கு, ஆனால் அதை எல்லாத்தையும் பணத்தாலதான் சரி செய்ய முடியும். நான் சமீபத்தில் சந்திக்கும் எல்லா விஷயத்தையும் பணத்தால் மட்டுமே சரி செய்ய முடியும். எனக்கு வரும் பிரச்சனையை என்னுடைய வாய்ப்பேச்சோ, கவிதையோ, காதலோ எதாலையும் சரி செய்ய முடியாது. காசு மட்டும் தான் அதை சரி செய்யும்,” என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.