1980-களில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நதியா, திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது திரையுலகுக்கு திரும்பி, முக்கியமான குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது சினிமா அனுபவங்களைப் பற்றிப் பேசும் போது, “தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ஒரு உயர்ந்த நிலைக்கு வந்தேன். படப்பிடிப்புகளின்போது எனக்கு எந்த விதமான கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டதில்லை. அந்த காலத்தில், எனது தந்தையும் படப்பிடிப்புகளுக்கு வந்து, என்னைக் கவனித்து பார்த்துக்கொள்வார்.” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, “இப்போது உள்ள வசதிகள் அப்போது இல்லை. அந்த காலத்தில் கேரவன் போன்ற வசதிகள் இல்லாததால், கிராமப் பகுதிகளில் யாரோ ஒருவரது வீட்டில்தான் உடை மாற்றுவோம். ஆனால், அப்போது இருந்த நடிகைகளுடன் ஒப்பிட்டால், இப்போது இருக்கின்ற நடிகைகளுக்கு எல்லா வசதிகளும் இருந்தாலும், அவர்கள் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் நம்மை கவனித்து கொண்டு இருக்கிறார் என்ற உணர்வோடு வாழ வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.” மேலும், “சமூக வலைதளங்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் காரணமாக, பொது இடங்களில் வரும் நடிகைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு மாறி விட்டது என்கிற காரணத்தால், நடிகைகள் பயப்படாமல், மேலும் எச்சரிக்கையாக, தைரியமாக, அமைதியாக வாழ வேண்டும்.” என்று நதியா தெரிவித்தார்.