மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்கும், மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகும் “யோலோ” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய அமீர், அனைவரும் இங்கு பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் எனக்கு சேது படம் எப்படி தொடங்கப்பட்டது என்று மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே, ஏன் இந்திய சினிமா வரலாற்றிலேயே காலையில் பூஜை போடப்பட்டு, அன்று மாலையே டிராப்பான படம் அந்த படம் தான். பத்திரிக்கையில் காலையில் அகிலன் என்ற படத்தின் பூஜை போடப்பட்டது என்று செய்தி வந்து பின் இந்த படத்தை எடுக்க மாட்டார்கள் என்கிற செய்தி வந்தது. பாலா என்பவர் பாலு மகேந்திரா என்கிற மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட விதை, அன்று விதைக்கப்பட்டது. ஆனால், முளைக்கவில்லை. அஜித்குமாரும் அந்த படத்தில் கமிட்டாகி பின் நடிக்காமல் போன படம் அதுதான்.
ஆனால், அன்று விதைக்கப்பட்ட விதையில் இருந்து தான் அமீர் என்கிற இயக்குநர் உருவானார். அங்கு இருந்துதான் சூர்யா என்கிற நடிகர் உருவானார். அங்கிருந்து தான் விக்ரம் என்கிற மாபெரும் நடிகர் உருவானார். அதன் பின் சூர்யா பல கம்பேனிகளை உருவாக்கினார், பல இயக்குநர்களை உருவாக்கினார். அதன் பின்னர் சேது படம் காலம் தாழ்ந்து தொடங்கப்பட்டது. அந்த படத்தை குறித்த பட்ஜெட்டில் எடுக்க முடியவில்லை, ஆகையால், பின்னால் அதிலும் காலதாமதம் ஆகி, ஒரு வழியாக, 2000 ஆம் ஆண்டு தான் அந்த படம் முடிவுக்கே வந்தது. சரி முடிவுக்கு வந்துவிட்டது.
அந்த படம் விற்பனைக்கு ஆனதா என்றால், யாருமே அதை வாங்கவே இல்லை. ஒன்று புரிந்து கொள்ளுங்கள். ஒரு இயக்குநர் உருவாகிறார் என்றால், அது அவருக்கானது மட்டுமல்ல அவர் ஒரு தலைமுறையையே உருவாக்குகிறார். பாலாவிடம் இருந்துதான் நான் வந்தேன். சூர்யா உருவானார். விக்ரம் என்ற மிகப்பெரிய நடிகரை அவர் உருவாக்கினார் என்று பேசினார். நாங்கள் அவர்களை அப்படியே பார்த்துக் கொண்டிருப்போம். எங்களிடம் இருந்த ஒரே நம்பிக்கை என்னவென்றால், எங்கள் படமும் நிச்சயமாக ஒரு நாள் வரும் என்பதுதான். காரணம், பார்த்த அனைவரும் படத்தை நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள்.