மலையாள நடிகை பார்வதி, திரைப்படங்களில் தனது கதாபாத்திரங்களை தீவிரமாக தேர்ந்தெடுத்து நடிப்பதுடன், சினிமா துறையில் உள்ள பெண்களின் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசும் நபராகவும் செயல்பட்டு வருகிறார். மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக கொண்டு, சினிமா பெண்கள் நல அமைப்பு (WCC) என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதுடன், சிலவற்றிற்கு தீர்வும் காண முயலுகிறார்.
இந்த WCC அமைப்பு 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தான். இந்த அமைப்பின் ஆரம்பகாலத்தில், பார்வதியுடன் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், மஞ்சு வாரியர், விது வின்சென்ட் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
ஆனால், காலப்போக்கில் மஞ்சு வாரியர் மற்றும் விது வின்சென்ட் போன்ற சிலர் இந்த அமைப்பிலிருந்து விலகி விட்டனர். சமீபத்திய ஒரு பேட்டியில், பார்வதியிடம் “மஞ்சு வாரியர், விது சந்திரா போன்றவர்கள் இந்த அமைப்பிலிருந்து விலகியதற்கான காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு கோபமாக பதிலளித்த பார்வதி, “ஏன் விலகினர் என்பதை அவர்களிடம்தான் சென்று கேட்க வேண்டும். இதைச் சம்பந்தம் இல்லாத என்னிடம் கேட்டுக் கொண்டிருப்பது சரியானதல்ல. உங்களுக்கு அவர்களிடம் நேரடியாக பேட்டி எடுக்க முடியாதா? யார் கடினமாக உழைத்து இருக்கிறார்களோ, அவர்களிடம் வந்து இப்படி கேள்விகள் எழுப்புவது மரியாதைக்குறைவாக இருக்கும்” என கூறியுள்ளார்.