Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

இந்தியன்-2 திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன்-2 திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. லஞ்சம், ஊழல் சம்பவங்கள் கவனத்திற்கு வந்ததும் அதில் சம்பந்தப்பட்ட மக்கள் அடைந்த வலியை யூடியூப் சேனல் ஒன்றில் பதிவேற்றி வருகிறார் துணை நாயகன் சித்ரா (சித்தார்த்). தன் நண்பர்களான ஜெகன், பிரியா பவானி சங்கர் கதாபாத்திரங்களுடன் நம்மைச் சுற்றி எதாவது மாறாதா? என்கிற அக்கறையில் சமூக வலைதளங்களில் விடியோக்களை வெளியிட்டு லஞ்சம் வாங்கிய அதிகாரிகளைக் கைது செய்ய வைக்கிறார்.

ஆனால், கைதாகும் அதிகாரிகள் உடனே சிறையிலிருந்து வெளிவருவதும் மீண்டும் பழையபடி லஞ்சம் வாங்கத் தொடங்குவதுமாக இருக்கிறார்கள். இதைப் பார்த்து மனம் நோகும் சித்ரா, “ஊழலைச் செய்பவர்களுக்கு நாம் இப்படி பேசினால் கேட்காது, கேட்கிற மொழியில் பேச வேண்டும்” என ஆத்திரப்படுகிறார். உடனே, யார் கேட்பார்? என்கிற குரல் வந்ததும் “இந்தியன் தாத்தா” என்கிறார்.

இந்தியாவிலிருந்து வெளியேறிய சேனாதிபதி இப்போது எங்கே, எப்படி இருப்பார்? உண்மையில் இருக்கிறாரா என கதை சூடுபிடிக்கிறது. இந்தியன் தாத்தாவை வரவழைக்க சித்ராவும் அவரது நண்பர்களும் முயற்சிக்கின்றனர். இந்தியன் தாத்தா எப்படி இந்தியா வந்தார்? லஞ்சம், ஊழல் செய்யும் அதிகாரிகளை என்ன செய்தார்? என்கிற கதையாக விரிகிறது இந்தியன்-2. இந்தியன் முதல் பாகத்தில் பேசப்பட்ட அதே கருவியை இன்றைய ஊழல்களுடன் பொருந்திய கதையாக இயக்குநர் ஷங்கர் உருவாக்கியுள்ளார்.

இந்தியன் திரைப்படத்தை ஒப்பிடும்போது திரைக்கதையில் இயக்குநர் ஷங்கர் தடுமாறுவது தெரிகிறது. ஆனால், இன்னும் அவரிடமிருக்கும் பிரம்மாண்டங்கள் தீரவில்லை. காலெண்டர், தாத்தா வராரு பாடல்கள், சேனாதிபதியின் சண்டைக்காட்சிகள், ‘இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே’ என்கிற சிந்தனைகள் என படத்தை விட்டு நழும்போதெல்லாம் சில காட்சிகள் காப்பாற்றிவிடுகின்றன. குஜராத் தொழில்பதிகளைக் கதைக்குள் கொண்டு வந்து மேலோட்டமான அரசியலைப் பேசியிருக்கிறார். நாட்டில் நடைபெறும் பெரிய ஊழல்களுக்கு எல்லாம் சின்னச் சின்னதாக லஞ்சம் பெறும் அதிகாரிகளே பெரிய காரணமாக இருப்பதை முதல் பாதியில் கவனிக்கும்படி சொல்லியிருக்கிறார். அதை இன்றைய இளைஞர்களின் ஊடக ஆயுதமான யூடியூப்புடன் இணைத்து காட்சிகளாக மாற்றியதும் ரசிக்க வைக்கிறது.

எத்தனையோ லட்சம் பேர் சிந்திய ரத்தத்தால் கிடைத்த சுதந்திரம் இப்படி லஞ்சம் மற்றும் ஊழல்களால் சீரழிந்து கிடைக்கிறதே என வேதனைப்படும் இந்தியன் தாத்தா இளைஞர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வதுடன் நெருங்கவே முடியாத ஊழல்வாதிகளுக்குத் தன் பாணியில் பதில் சொல்லும் காட்சிகள் கவனத்தை சிதறாமல் பார்த்துக் கொள்கின்றன.

கதை நாயகனான நடிகர் கமல்ஹாசன் சில காட்சிகளில் விசிலடிக்க வைக்கிறார். இத்தனையாண்டு கால நடிப்பால் முதுமையான உடல்மொழியை சில இடங்களில் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார். அவர் குரலிலிருந்து வரும் வசனங்களும் அதற்கு ஏற்ற தோற்றங்களும் ஏமாற்றத்தை தரவில்லை. ஆனாலும் சில காட்சிகளில் இந்தியன் தாத்தாவின் மேக்கப் தெரிகிறது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் கமல் சட்டையைக் கழற்றியதும் திரையரங்கம் அதிர்கிறது. நடிகர்கள் சித்தார்த், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரின் நடிப்பு கதைக்கு ஏற்ப சரியாக இருக்கின்றன. வில்லனான எஸ்.ஜே.சூர்யாவுக்கு அதிக காட்சிகள் இல்லை. மூன்றாம் பாகத்தில் இருக்கலாம்.

இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை, வேகமான திரைக்கதைக்கு தொந்தரவு செய்யாமல் இருக்கிறது. சில இடங்களில் இந்தியன் முதல் பாகத்தின் பின்னணி இசையைப் பயன்படுத்தியிருப்பதால் பழைய நினைவுகளை மீட்கும்படியாக ரசிகர்களிடம் கைதட்டல்களையும் பெருகின்றன. ஒளிப்பதிவு, சண்டைப்பயிற்சி, எடிட்டிங் என 3 மணி நேர படத்திற்கு முழுமையான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முடிவில் இந்தியன் தாத்தாவை ஊரே விரட்டி அடிக்கிறது. ஏன்? இந்தியன்-3 டிரைலரை போட்டார்கள். இளவயது கமல் அதாவது சேனாதிபதியின் அப்பா வீரசேகரன் மற்றும் சேனாதிபதி தாய் , பிரிட்டிஷ் காலகட்டம் போன்ற காட்சிகளால் விசில்களை பறக்கவிட்டன. மூன்றாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்தியன் 2 நிச்சயமாக ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

Read more

Local News