ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகைகள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள், அதோடு தங்களின் பாலியல் தொல்லை அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை பிரியாமணியும் இதுகுறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பிரியாமணி கூறியதாவது, “மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைத்து அறிக்கை வெளியானது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. சில நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். மலையாளத்தில் கமிட்டி அமைத்ததுபோல தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகிலும் இத்தகைய கமிட்டிகள் அமைக்கப்படுவது நல்லது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். திரைத்துறை மட்டுமல்லாமல், எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கும். பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தைரியமாக பேசுவதால் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரங்கள் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரங்கள் தரமுடியாது. இப்போது கேமரா போன்கள் உள்ளன; ஆனாலும் இப்போது வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும். எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்படவில்லை. பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர்களும் என்னிடம் வந்து இதை பற்றி சொல்லியதும் இல்லை,” என்று அவர் கூறினார்.