மலையாள திரையுலகில் நடிகை பார்வதி எப்போதும் தப்பானதாக கருதும் விஷயங்களை உடனடியாக சுட்டிக்காட்டி நேர்மையாக பேசும் தன்மையுடையவர். இதனால், அவருக்கு மலையாள திரையுலகில் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலும், அவர் சில சக நடிகைகளுடன் சேர்ந்து சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றைத் தொடங்கி, திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையின் மூலம் பல பெண்கள் தங்களை பாலியல் துன்புறுத்தல் சந்தித்த சம்பவங்களை வெளிப்படையாக பகிர்ந்து, குற்றவாளிகளுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்தனர். இந்த நிகழ்வுகளில் பெரும்பாலும் சீனியர் நடிகர்களே குற்றச்சாட்டுக்கு ஆளானதாக தெரிய வந்தது.
ஒரு சமீபத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, பார்வதியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “சீனியர் நடிகர்களாவது பரவாயில்லை, ஆனால் இன்றைய சில இளம் நடிகர்களின் நடத்தை மிக மோசமாக உள்ளது. அவர்களுக்கு சீனியர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் இல்லாததாலோ அல்லது வயிற்றெரிச்சலாலோ, அவர்கள் கோபத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் சுற்றி நடப்பதைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். சில சமயங்களில் அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகுமோ என பயந்த நேரங்கள் உண்டு. நல்லது என்னவெனில், அது நடைபெறாமல் போய்விட்டது” என்று கருத்து தெரிவித்தார்.