2015ல் மலையாளத்தில் வெளியான பிரேமம் படமானது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில், நிவின்பாலி கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகள் அறிமுகமானார்கள். மூவரும் இன்றும் திரையுலகில் சிறந்த இடத்தில் உள்ளனர். நிவின்பாலிக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, அதே சமயம் அதில் நடித்த சிறிய நடிகர்களும் பிரபலமானார்கள். குறிப்பாக, மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி ரசிகர்களிடம் பெரும் கவனம் பெற்றார்.
அந்த காலத்தில் ஒரே ஒரு படம், நேரம், இயக்கியிருந்த அல்போன்ஸ் புத்ரன், பிரேமம் படத்திற்காக ஆடிஷன் நடத்தி நடிகைகளை தேர்வு செய்தார். அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியனை தேர்வு செய்த அவர், மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்காக நடிகை அசினை அணுக வேண்டும் என யோசித்தாராம். நிவின்பாலியும் அசினுடன் தொடர்பு கொண்டு பேசுவதாக கூறியுள்ளார். ஆனால், மலர் டீச்சர் கதாபாத்திரம் ஒரு தமிழ்ப் பெண் என்பதால் கடைசியில், இயக்குனர் சாய்பல்லவியை தேர்வு செய்து, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
அதுமட்டுமல்ல, அந்த நேரத்தில் பிரேமம் பட ஆடிஷனில் கலந்து கொண்டவர்தான், ஜெய்பீம், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை ரஜிஷா விஜயனும் ஆவார். மூன்று கதாநாயகிகள் தேவை என்பதால், அவர் ரஜிஷா விஜயன் போன்ற அழகான திறமை வாய்ந்த இன்னும் சிலரை கூட ஆடிஷனில் தேர்வு செய்து வைத்தார். ஆனால், ரஜிஷாவுக்கு பதிலாக சாய் பல்லவிக்கு மலர் கதாபாத்திரம் கிடைத்தது. ரஜிஷா விஜயனும் பின்னர் சினிமாவில் அறிமுகமாகி, இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.