அஜித் குமார் நடிக்கும் புதிய படத்துக்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்தார். சமீபத்தில் நேசிப்பாயா படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேட்டியளித்த அவர், “பில்லா 3 படம் உருவாகாது. ஆனால், மீண்டும் நான், அஜித், யுவன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார். அவரது இந்தக் கருத்து, அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேசிப்பாயா திரைப்படம் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி உள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தை ராகுல் வெளியிடுகிறார். ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ள இப்படத்தின் விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அஜித், விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜா இணைந்து பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய திரைப்படங்களை கடந்த காலத்தில் உருவாக்கி வெற்றிக் கண்டனர். இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.