சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொண்டு மூன்றாம் பரிசை வென்றுள்ளார். சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த கார் பந்தயத்தில், அஜித் மற்றும் அவரது குழுவினர் இந்தியா சார்பில் பங்கேற்று, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இந்தச் சாதனையின் மூலம், சர்வதேச கார் பந்தய அரங்கில் அஜித்தின் திறமைக்கு அதிக கவனம் கிடைக்கத் தொடங்கியது. இதனால், பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்காக அவர் தொடர்ந்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், துபாயில் சொகுசு காரில் இருந்து நடிகர் அஜித் இறங்கிச் செல்லும் ஒரு வீடியோ அவரது மேலாளர் வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு லம்போர்கினி நிறுவனத்திற்குச் சொந்தமான 11559 என்ற எண் கொண்ட வெள்ளை நிற சொகுசு கார் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அந்தக் காரிலிருந்து அஜித் ஸ்டைலாக இறங்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற ஜெர்கின் மற்றும் கூலிங் கிளாஸுடன் ஸ்டைலாக வந்த அவரை பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156941.png)
இதனிடையே, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே திரையரங்குகளில் வெளியானது. வெளியானதற்குப் பிறகு, மிகுந்த கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அதன் வசூல் விவரங்கள் தற்போதுதான் வெளிவந்துள்ளன. தமிழகம் முழுவதும் 900 தியேட்டர்களில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ.139 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.