சிறுவயதில் தங்களின் பெற்றோர் காணாமல் போனதால், தம்பிகளான முத்துவேல் ராயனையும் -சந்தீப் கிஷன், மாணிக்கவேல் ராயனையும் காளிதாஸ் ஜெயராம், தங்கையான துர்காவையும் துஷாரா விஜயன் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறார் மூத்த அண்ணனான ராயன் என்கிற காத்தவராயன். சிறுசிறு வேலைகள் செய்து, படிப்படியாக வளர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்து தன் உடன்பிறப்புகளை வளர்த்தெடுக்கிறார். மூத்த தம்பி முத்துவேல் வேலைக்குச் செல்லாமல் அடிதடி செய்துகொண்டிருக்க, இளைய தம்பி மாணிக்கவேல் கல்லூரியில் படிக்கிறார். ராயனுக்கு உலகமே அந்தக் குடும்பமாக இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் பிரபல ரவுடிகளாக இருக்கும் துரையையும் (சரவணன்), சேதுவையும் (எஸ்.ஜே.சூர்யா) மோதவிட்டுப் பார்க்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் (பிரகாஷ் ராஜ்). எதிர்பாராத சம்பவத்தில் ராயனின் தம்பியான முத்துவேலும் அந்த மோதலுக்குள் சிக்கிக்கொள்ள, அதனால் மொத்த ராயன் குடும்பமும் ஆபத்துக்குள் சிக்குகிறது. இறுதியில் தன் குடும்பத்தை ராயன் காப்பாற்றினாரா, அவர்களுக்கு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இயக்குநர் தனுஷின் ‘ராயன்’.
ராயனாக தனுஷ் முதற்பாதியில் ராஜபாட்டை நடத்துகிறார். கடுமைமர்சனம் யான வறுமையாலும், குடும்ப பொறுப்புகளாலும் விளைந்த இறுக்கமான முகமும் முதிர்ச்சியான அணுகுமுறையும் அந்த மூத்த அண்ணன் பாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்திப் போகிறது. மற்றொரு பரிமாணத்தில் ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் ஹீரோவாகவும் அட்டகாசம் செய்கிறார். முத்துவேல் கதாபாத்திரம் கோரும் துடிப்பு, சேட்டை, எல்லோரிடமும் வெறுப்பைச் சம்பாதிக்கும் நடவடிக்கைகள் என சந்தீப் கிஷன் தந்திருப்பது குறைவில்லாத நடிப்பு. முதல் பாதியில் தெளிவான தம்பியாகவும் இரண்டாம் பாதியில் குழப்பமான தம்பியாகவும் தேவையான அழுத்தத்தைச் சேர்க்கிறார் காளிதாஸ் ஜெயராம்.

தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, வித்தியாசமான உடல்மொழியால் வில்லனிஸத்தைத் தொடக்கத்தில் கொடுக்க முயன்றிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த பலப்பரீட்சையில் ஆறுதல் பரிசைதான் பெறுகிறார் என்றாலும், பிற இடங்களில் தன் வழக்கமான நடிப்பால் பாஸ் மார்க் பெறுகிறார். காதல், கோபம், அன்பு என எல்லாவற்றிலும் ஹை பிச்சுடன் உலாவும் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் அபர்ணா பாலமுரளி. பிரகாஷ் ராஜ், சரவணன் ஆகியோரின் கதாபாத்திரங்களை இன்னும் அழுத்தமாக எழுதியிருக்கலாம். ஆனாலும், அந்தச் சிறிய திரை நேரத்திலேயே தேவையான கனத்தைத் திரையில் கொண்டு வருகிறார் பிரகாஷ் ராஜ். இவர்களுடன் இளவரசு, வரலட்சுமி, திலீபன் ஆகியோர் அழுத்தமில்லாமல் வந்து போகிறார்கள். சிறுவயது தனுஷாக வரும் நடிகரும் கவனிக்க வைக்கிறார்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் படத்திற்கான பிரத்தியேக கலர்டோன் அழுத்தமாகவே பதிகிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எல்லா பாடல்களுமே தேவையான உயிர்ப்பையும், Vibe-யையும் கச்சிதமாகக் கடத்தி ரசிக்க வைக்கின்றன. தன் அட்டகாசமான பின்னணி இசையில், இன்னொரு கதாநாயகனாக ஜொலிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். சுவாரஸ்யமில்லாத காட்சிகளைக் கூட, தன் ரகளையான இசையால் தூக்கி நிறுத்துகிறார். ராயன் குடும்பத்தின் அறிமுகம், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கு இடையிலான உறவு, வில்லன்கள் மற்றும் பிற பிரதான கதாபாத்திரங்களின் அறிமுகம் என வேகமாக, அதே சமயம் பிரத்யேக திரைமொழியோடு நகர்ந்து தொடக்கத்தில் கவர்கிறது படம். ‘பாட்ஷா’ படத்தின் சாயலும், யூகிக்கும்படியான முக்கிய நகர்வுகளும் ஒரு வகையில் முதல் பாதிக்கு பிளஸ்ஸாகவே மாறியிருக்கின்றன. பின்னணி இசை, நடிகர்களின் நடிப்பு, த்ரில் எனச் சுவாரஸ்யம் குறையாத அந்த இடைவேளை காட்சி தரமான சம்பவ ரகம்.

இதற்கு நேர் எதிராக இரண்டாம் பாதியில் லாஜிக்கே இடிக்கும்படி சண்டைக்காட்சிகளும், ட்விஸ்ட்டுகளும் வரிசைகட்டி வருகின்றன. முதற்பாதியில் பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையிலுள்ள உறவின் ஆழம் தெளிவாகவும், அழகாகவும் காட்டப்பட, இரண்டாம் பாதியில் அந்தத் தெளிவு மிஸ் ஆகி, கதாபாத்திரங்கள் இஷ்டத்துக்கு இன்டிகேட்டர் போடுகின்றன. எக்கச்சக்கமான கத்தியும், ரத்தமும், மீண்டும் மீண்டும் வரும் அழுத்தமில்லாத எமோஷனல் காட்சிகளும் பார்வையாளர்களுக்குப் பளுவாக மாறிவிடுகின்றன. மொத்தமாகவே இரண்டாம் பாதியில் மேம்போக்கான திரைக்கதையின் பாதிப்பையே உணர முடிகிறது.

தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ் என ஜாம்பவான்கள் களத்திலிருந்தும், மனதில் நிற்கும்படியான அழுத்தமானதொரு காட்சியைக் கொண்டு வர தயக்கம் காட்டியுள்ளது. அதீத வன்முறையைக் காட்சிப்படுத்திய விதம், என்கவுன்ட்டர்களைச் சர்வசாதாரணமாகச் செய்யும் காவல் அதிகாரி எனச் சில காட்சிகள் சற்று அலுப்பும் லிஸ்ட்டில் சேர்கின்றன. ராவணன், சூர்ப்பணகை, துர்கை அம்மன் காட்சி என ஆங்காங்கே குறியீடுகள். ஆனால், அவை படத்தின் கதைக்குப் பெரிய பங்களிப்பை ஆற்றவில்லை. அண்ணன் – தங்கை சென்டிமென்ட் காட்சிகளுமே சில இடங்களில் க்ரிஞ்ச்மீட்டரை எகிறச் செய்யும் நிகழ்வாக மாறிப்போயிருக்கின்றன.எமோஷனலான களத்தாலும், ஆக்ஷன் அணுகுமுறையாலும் முதற்பாதியில் பட்டையைக் கிளப்பும் படம், மேம்போக்கான திரைக்கதையால் இரண்டாம் பாதியில் நல்ல ரகமாகவே இருக்கிறது. நிச்சயம் திரையரங்குகளில் ராயனை காணலாம்.