Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

பலரும் வளர்ந்ததும் கடந்து வந்த பாதையை மறந்து விடுகின்றனர்… டாடா நடிகை பவுசி ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை நடிகை பவுசி தனது திரையுலக அனுபவத்தை ஒரு பத்திரிகைக்கு பகிர்ந்துள்ளார். வீட்டில் நான் செல்லப்பொண்ணு. அப்பா தொழிலதிபர். சிறுவயதிலிருந்தே நடிகையாக ஆசை இருந்ததால் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தேன். என் ஆசை குறித்து பள்ளிப்பருவத்திலேயே குடும்பத்தில் தெரிவித்தேன். அப்போது அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் படிக்க சேர்ந்தேன். என் தோழியின் உறவினர் பியூட்டி பார்லர் கடை திறப்பு விழாவை விளம்பரப்படுத்தும் விதமாக மாடல் அழகிகளை வைத்து போட்டோ ஷூட் நடத்தி பேனர்களில் பதிவிட நினைத்தார். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆர்வமாக கலந்து கொண்டேன். அது என் சினிமா வாழ்வின் தொடக்கம். பின்னர் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்கள் என்னை போட்டோ ஷூட் எடுக்க வந்தார்கள். எனக்கும் விருப்பம் இருந்ததால் ஆர்வமாக பங்கேற்றேன்.

இப்படியே வாழ்க்கை சென்றபோது சினிமாவில் காஸ்டியூமராக இருக்கும் தோழி ஒருவரின் மூலம் ‘தட்றோம் துாக்றோம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நல்ல முறையில் நடித்தேன். கொரோனா காலம் முடிந்தபின் படம் வெளியானது. அதை பார்த்து சீரியல் இயக்குநர் ஒருவர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து ‘கோகுலத்தில் சீதை,’ ‘சிவா மனசுல சக்தி’ உள்ளிட்ட 7 சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

என் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற ஆரம்பித்தது. கவின் நடித்த ‘டாடா’ படத்தில் சாதனா கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன்பின் ‘இந்திரா’ சீரியலில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினேன். அது மக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றது. சீரியலில் நடிக்கும் போது மூத்த நடிகை நளினியுடன் பழகிய நாட்களை என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளாக கருதுகிறேன். நான் மனச்சோர்வாக இருந்தபோது அவர் என்னை ஊக்கப்படுத்தி, ஆதரவாக பேசி அரவணைத்துக் கொண்டார். பட வாய்ப்புகளுக்காக பல ஆடிஷன்களில் பங்கேற்றுள்ளேன். என் திறமையை வெளிக்காட்டியும் தேர்வாகாமல் புறக்கணிக்கப்பட்டதுண்டு. அதுபோன்ற நேரங்களில் வருத்தமாக இருக்கும். பிறகு என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வேன். நம்முடைய கடமையை சரியாக செய்தால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதை தெரிந்துகொண்டேன்.

பலரும் வளர்ந்ததும் கடந்து வந்த பாதையை மறந்து விடுகின்றனர். அவ்வாறு இருக்கக் கூடாது. எந்த நிலை சென்றாலும் வந்த நிலை மறக்கக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். சீரியல்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறேன். சினிமா வாய்ப்புகளும் வருகிறது. எனக்கான கதையை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும். இயற்கையாகவே கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக என் அழகிய சிரிப்பை நினைக்கிறேன் என்றார்.

- Advertisement -

Read more

Local News