பயமறியா பிரம்மை- ‘கவனம் தேவை’ என்ற எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கும் இந்தப் படத்தின் கதையை விவரிக்கும்போது நமக்கு எச்சரிக்கை தேவை. ‘பயமறியா பிரம்மை’ என்ற புத்தகத்தை சில வாசகர்கள் படிக்கிறார்கள். அதன் எழுத்தின் தாக்கத்தால் ஒவ்வொரு வாசகர்களும் தங்களை முதன்மை கதாபாத்திரமாகக் கற்பனை செய்கின்றனர். மற்றொரு புறம் ‘உச்சிமுகடு’ என்ற புத்தகத்திற்காக சாகித்யா அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கபிலன், 25 ஆண்டுகளில் 96 பேரைக் கொலை செய்த சிறைக்கைதி ஜெகதீஷின் வாழ்க்கையைப் பற்றிய கதையை எழுத அவரை சிறையில் சந்திக்கிறார்.அங்கே கபிலன் தன்னுடைய எழுத்துகளைப் படைப்புகளாகக் கூற, ஜெகதீஷ் தன்னுடைய கொலைகளையும் படைப்புகளாக விளக்குகிறார்.
ஜெகதீஷின் முகத்தை வைத்து நேராகக் கதை சொல்லாமல், புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களின் முகத்தை வைத்துக் கதை சொன்னால் எப்படி இருக்கும் என்கிற புதிய முயற்சிதான் ‘பயமறியா பிரம்மை’ படத்தின் கதை.நாற்காலியில் உட்கார்ந்து கதை கேட்கும் எழுத்தாளராக வினோத் சாகருக்கு தூய தமிழ் வசனங்கள், எதையும் நேரடி கேள்வியாக வைக்காமல் பூடகமாகப் பேசும் செயற்கையான கதாபாத்திரம். இறுதிக் காட்சியில் உயிர் பயத்தைத் தவிர நடிப்புக்கு பெரிய வேலை இல்லை. கைதியாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஜெடிக்கு பூடகமான வசனங்களோடு இருட்டு பிரேம்களையும் சேர்த்திருக்கிறார்கள்.
ஜெகதீஷாக கற்பனை செய்யும் குரு சோமசுந்தரம், ஹரீஷ் உத்தமன், சாய் பிரியங்கா ஆகியோர் நடிப்பில் குரு சோமசுந்தரம் மட்டும் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்.இந்தக் கதையில் ‘கே’யின் பின்னணி இசை மட்டுமே சற்று ஆறுதல் அளிக்கிறது. 70-80களில் நடக்கும் கதை என்பதைக் காட்ட ரெட்ரோ பாணியிலான ஒளியுணர்வை வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நந்தா. சிதறிக் கிடைக்கும் காட்சிகளை ஒரு படமாகக் கோர்ப்பதற்கு அதிக சிரமப்பட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் அகில் பிரகாஷ்.நேராகக் கதை சொல்லியிருந்தால் சாதாரண பிளாஷ்பேக் கதை என்று சொல்லி விடுவார்களோ என்ற எண்ணத்தில், புத்தகம், அதைப் படிக்கும் நபர்கள், அவர்கள்தான் ஜெகதீஷ் எனக் கூறிய இயக்குநர் ராகுல் கபாலி, 96 பேரைக் கொன்ற மனிதரின் கடந்த காலத்தை ஆராய்கிறோம் எனக் கூறுகிறார்.
ஆனால் யார் அவர், அவரை கொலை செய்ய வைக்கும் மாறன் யார், ஏன் கொலை செய்தவர்களின் ரத்தத்தில் ஓவியங்கள் வரைகிறார் என்பது பற்றிய தெளிவான விளக்கமில்லை. இதனால் படம் முடியும் வரையில் கதாபாத்திரங்களோடு ஒன்றாக இயலவில்லை.திரைக்கதை பாகம் பாகமாகப் பிரித்து சொல்லப்படும் விதம் பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது. எழுத்தாளரும் கொலைகாரனும் பேசிக் கொள்ளும் தூய தமிழ் வசனங்கள் சோதனை முயற்சியாகும்.
ஒவ்வொரு வசனங்களின் இடையிலும் இடைவெளி விடுகிறார்கள். படக்குழுவினர் வித்தியாசமான ஒன்றை முயற்சிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தப் படத்தை அணுகியிருக்கிறார்கள். அதனால் வெறும் ஒன்றரை மணி நேரப் படமே பார்வையாளர்களை அயர்ச்சி அடைய வைத்துவிடுகிறது. ஆக மொத்தத்தில் இப்படத்தை ஒரு முறை இவர்களின் வித்தியாசமான முயற்சிக்காக பார்க்கலாம்.