தென்காசி மாவட்டம் ஆலங்குளம் TPV மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக, ராமராஜன் திரையரங்கிற்கு வந்திருந்தார். அப்போது பேசிய அவர், மக்கள் திரையரங்கிற்கு வருவது கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில், என் படத்தை பார்க்க பெண்கள் தியேட்டருக்கு வருவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை எளிய சாமானிய மக்கள் திரையரங்குகளுக்கு வரமுடியாமல் போய்விடுகிறார்கள். இதனால் நாளை முதல் ஆலங்குளம் TPV திரையரங்கில் 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சாமானியன் படத்திற்கு சரியாக விளம்பரம் செய்யப்படவில்லை. பலருக்கும் படம் எங்கு ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு நிகழ்ச்சியில் “ஆப்ரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெத்” என்று பேசியுள்ளார். இயக்குநர் தனது வேலையைச் செய்து முடித்தார். நான், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சேர்ந்து படத்தின் வேலைகளை சரியாக முடித்தோம். வெளியே ஒரு குழந்தையை அனுப்பியபோது, வெளியே வந்த குழந்தையை தயாரிப்பாளர் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டார்.

தொலைக்காட்சியில் விளம்பரம் இல்லை, செய்தித்தாள்களில் விளம்பரம் இல்லை, சாமானியன் படத்திற்கு இதுவரை எந்த விளம்பரமும் இல்லை. விளம்பரம் இல்லாமல் ராமராஜன் படம் தியேட்டருக்கு வருகிறது என்பதைக் மக்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும். இதற்காக அவர் வாங்கிய பணத்தை என்ன செய்தார் என்பது எனக்கு தெரியாது என்றார்.
