மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் குறித்து யோகி பாபு பேசும்போது, “சமீபத்தில் நான் ‘வாழை’ படத்தை பார்த்தேன். மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் கலையரசன் உட்பட அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு ‘வாழை’ இருக்கும். மாரி செல்வராஜின் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டமான விஷயங்கள் இருந்துள்ளது என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. குறிப்பாக, கிளைமேக்ஸில் அம்மாவின் மடியில் படுத்திருப்பது மாரி செல்வராஜ்தான் எனும்போது, நான் கலங்கிவிட்டேன்,” என்றார்.
“நான் மாரி செல்வராஜுடன் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளேன். ‘பரியேறும் பெருமாள்’ படத்தை உருவாக்கும் போதே, மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களும் இருந்தது. படத்தின் கதை கேட்கும்போது எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், படம் செய்வதற்குள் தான், மாரி செல்வராஜின் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்னைகள் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் மாரி செல்வராஜ் மறைத்தது ‘வாழை’ படத்தையே. மாரி செல்வராஜ் தனது வாழ்வில் இவ்வளவு பெரிய சோகம் இருக்கின்றது எனக் கூறியதே இல்லை. ‘வாழை’ மிகவும் தரமான படம். இன்றும் இந்தப் படம் தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அனைவரும் இந்தப் படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். ஒரு மனிதனின் வலியை ரொம்ப தெளிவாக சொல்லியுள்ளார். ஒரு வலியைச் சுற்றி பல வலிகள் உள்ளன. எல்லோரும் இந்தப் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்,” என யோகி பாபு கூறினார்.