கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘இந்தியன் 2’ படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றது. டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.
சென்னையில் நடந்த விழாவில், ‘இந்தியன் 2’ படக்குழு கலந்து கொண்டது. இயக்குநர் சங்கர், “இன்றைய சூழலில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் ‘இந்தியன் 2’. ‘இந்தியன் 1’ கதை தமிழகத்திற்குள் நடப்பது போன்ற சம்பவங்களை கொண்டிருந்தது. ‘இந்தியன் 2’ மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களைப் பற்றியும் பேசுகிறது. இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. இந்த படம் ஒவ்வொருவரையும் யோசிக்க வைக்கும். கமல்ஹாசன் தான் இந்த படத்தின் சிறப்பான காரணம். முதல் பாகத்தில் 40 நாட்கள் சிறப்பு வேடம் போட்டு நடித்தார். இந்த படத்திற்கு தினமும் சிறப்பு வேடம் போட வேண்டி இருந்தது.
மேக்கப் காரணமாக படப்பிடிப்பு துவங்கும் முன்பே வந்து, எல்லோரும் புறப்பட்ட பிறகே கமல்ஹாசன் புறப்பட்டு சென்றார். மேக்கப்-ஐ போடுவதற்கும், அழிப்பதற்கும் 1 மணி நேரம் ஆகிவிடும். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவின் மேக்கப் கமல்ஹாசனின் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது. இந்தமுறை மேக்கப் சார்ந்த நுட்பங்கள் வளர்ச்சி அடைந்திருப்பதால், கமல்ஹாசனின் நடிப்பை கடந்த பாகத்தை விட இந்த பாகத்தில் அதிகளவில் பார்க்க முடியும்.
கமல்ஹாசனுக்கு எந்த சவால் கொடுத்தாலும், அவர் அதை சிறப்பாக செய்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பாக இருந்தது. அனிருத் சிறப்பான இசை கொடுத்துள்ளார். ஒவ்வொரு டியூனும் திரும்ப திரும்ப செய்து கொடுத்தார். நடிகர் விவேக் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,” என்றார்.