மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பின்னர் அரசியல் சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், கேரளாவின் முதல் பாரதிய ஜனதா எம்.பி. ஆனார். இதன் மூலம், கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி தனது நிலையை பலப்படுத்தியது. இதற்கான பாராட்டாக, பாரதிய ஜனதா அரசு அவரை மத்திய அமைச்சராக நியமித்தது.
இந்நிலையில், கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி, “அமைச்சர் பதவியை விட சினிமாவை அதிகமாக மதிக்கிறேன். சினிமாவுக்காக அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார். மேலும் அவர், “நான் அமைச்சராக இருப்பதை விட சினிமாவில்தான் அதிக முக்கியத்துவம் தருகிறேன். 22 படங்களில் நடிக்க முன்பணம் பெற்றுள்ளேன். இந்தப் படங்களில் நடிக்க அனுமதி பெற வேண்டும் என்பதற்காக நான் அமித்ஷாவிடம் கடிதம் கொடுத்தேன். ஆனால், அவர் அந்தக் கடிதத்தை கோபத்தில் தூக்கி வீசி விட்டார்” எனக் கூறினார்.
மேலும், “நான் சினிமாவில் நடிக்க முடியாவிட்டாலும் கவலையில்லை. செப்டம்பர் 6ம் தேதி ‘ஒற்றக்கொம்பன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற எண்ணம் காரணமாக, என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும், நான் கவலைப்பட மாட்டேன். சினிமா இல்லாவிட்டால், நான் உயிருடன் இருக்க முடியாது” என்று கூறினார். சுரேஷ் கோபியின் இந்தக் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.