நான் சினிமாவில் ரஜினி சாரோடும் கமல் சாரோடும் வேலை செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ‘பேட்ட’ படத்தில் ரஜினி சாரோடு வேலை செய்தேன். ஆனால், கமல் சாரோடு வேலை செய்வது மட்டும் நடக்காமல் இருந்தது. ஷங்கர் சார் ஆபிஸில் இருந்து போன் பண்ணி, ”இந்தியன் – 2′ படத்தில் ஒரு பாடல் செய்ய வேண்டும்’ என்று சொன்னபோது அந்த ஆசையும் நிறைவேறியதென்று சந்தோஷமாக ஷங்கர் சாரை பார்க்கப் போனேன். அங்குதான் ஷங்கர் சார் ஒரு திருப்பம் வைத்தார். ‘இந்த பாடலில் கமல் சார் இருக்க மாட்டார். ஆனால், இந்தியன் தாத்தாவோட வருகையை சொல்வதற்கான பாடல் இருக்கும்’ என்று சொன்னார். சரி, கமல் சார் படத்தில் இவ்வளவு பெரிய பாடல் கிடைக்குதே, இதைச் சூப்பரா செய்யிடுவோம் என்று இறங்கி வேலை செய்யத் தொடங்கினேன்.

ஷங்கர் சார் இந்தப் பாடலை ரொம்ப பிரமாண்டமாகத் திட்டமிட்டிருந்தார். இதுவரை நான் 500 நடனக்காரர்களை வைத்து பாடல் செய்யவில்லை. அந்தளவு என் கரியரோட பெரிய பாடலாக ‘கதறல்ஸ்’ பாடல் அமைந்திருக்கு. ஷங்கர் சாரும் பாடலை பார்த்து, ‘ரொம்ப சூப்பராக செய்திருக்கிறீர்கள். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று பாராட்டினார். இந்தப் பாடல் சூப்பராக வந்ததற்கு மிக முக்கியமான காரணம் அனிருத்தான். அவர் போட்டுக்கொடுத்த செம ட்யூனாலதான் என்னால ரொம்ப நல்லா கோரியோ பண்ண முடிஞ்சது. இந்தப் பாடலுக்காக நான் கேட்ட எல்லா விஷயத்தையும் ஷங்கர் சார் மற்றும் தயாரிப்பாளரும் செய்து கொடுத்தார்கள். அதுதான் இந்தப் பிரமாண்டத்திற்குக் காரணம்.
முதலில் சித்தார்த்தான் அந்த நிகழ்ச்சியிலும் நடனம் ஆட வேண்டியிருந்தது. ஆனால், அவர் அந்த தேதியில் ஊருல இல்லாததால் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போ ஷங்கர் சார் பொண்ணு அதிதியை ஆட வைக்கலாமானு யோசனை சொன்னார். சமீபத்தில் ஷங்கர் சார் பொண்ணு கல்யாணத்தில் சார் பையன் அர்ஜித் ஆடுன வீடியோக்கள் பார்த்தேன். அவரைக் கேட்கலாம்னு ஷங்கர் சார் கிட்ட கேட்டப்போ, ‘மாஸ்டர், அவன் என் பையன். அவனும் சினிமாவுக்குதான். அவனை யூஸ் பண்ணிக்கோங்க. மோசமா ஆடுனா மட்டும் நல்லா சரி பண்ணிடுங்க’ன்னு சொன்னார். ஆனால், அந்த பையன் வந்து ஆடுனான்; என்னா எனர்ஜி அவனுக்கு! செமையா ஆடுனான். தான் ஒரு பெரிய ஆளோட பையன்னு எந்தப் பந்தாவும் இல்லாமல் கூலா இருந்தான். எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருந்தது. ‘நல்லா ஆடுறேனா மாஸ்டர்’ன்னு கேட்டுட்டே இருந்தான். நிச்சயமா அவன் ஒரு ஸ்டாராக வருவான். அந்தளவுக்கு அவனுக்குள்ள திறமை இருக்கு.

‘குப்பத்து ராஜா’ சரியா போகலையென்று சொல்றாங்க. அதற்கான முழு காரணமும் நான்தான். ஒரு இயக்குநராக அந்தத் தப்புக்கு நான் பொறுப்பேற்கிறேன். எந்த இடத்தில் விழுந்தேனோ அதே இடத்தில் ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போ அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கு. நேரம் கூடி வரும் போது நிச்சயமாக அடுத்த படத்தை இயக்குவேன். முதல் படத்தில் நடந்த தவறு அடுத்த படத்தில் நடக்காது என்று இப்போ உறுதியா சொல்லிகிறேன்.

அதற்கு ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும். அந்த நிகழ்ச்சி போனதுக்குப் பிறகுதான் எனக்கு நிறைய அன்பு கிடைத்திருக்குனு சொல்லணும். அடுத்தடுத்து டிவி ஷோக்களுக்குக் கூப்பிட்டாங்க. ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியோட தயாரிப்பாளர், இயக்குநர், அப்பறம் கோமாளிகள் எல்லாருமே ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்தாங்க. என்னை எப்படி இந்த நிகழ்ச்சிக்கு செலக்ட் பண்ணினாங்கன்னு எனக்கே தெரியலை.’இந்தியன் – 2′ ஷூட்டுக்காக எண்ணூரில் இருந்தப்போ, அங்கிருந்த மீனவ மக்கள் எல்லாரும் எனக்காக மீன், இறால், நண்டு எல்லாமே சமைச்சு கொண்டு வந்து என்னைச் சாப்பிட வைப்பாங்க. ‘எங்க மாஸ்டர்; எங்க மாஸ்டர்’ன்னு அவ்வளவு அன்பா இருப்பாங்க. இதெல்லாம் எனக்கு அந்த நிகழ்ச்சி மூலமாகதான் நடந்துச்சு.