சினிமா துறையில் இயக்குநராகவும் நடிகராகவும் மின்னும் ஒருவர் சேரன். இவரது படங்கள் பெரும்பாலும் கிராமங்களையும் குடும்ப வாழ்க்கையையும் மையமாகக் கொண்டவை. “ஆட்டோகிராப்,” “சொல்ல மறந்த கதை,” “தவமாய் தவமிருந்து,” “பொக்கிசம்,” “முரண்,” “யுத்தம் செய்” போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார்.
இந்நிலையில், கடலூர் – புதுச்சேரி இடையே தினசரி 150-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மூன்று நிமிட இடைவெளியில் பஸ்கள் அதிகம் இயக்கப்படுவதால், பஸ் ஓட்டுநர்கள் ஏர் ஹாரன் பயன்படுத்தி மிகுந்த சத்தம் எழுப்பி அதிவேகமாக மற்ற வாகனங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றனர். இன்று காலை 11.30 மணியளவில், புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி பயணம் செய்த நடிகர் சேரனின் கார், தனியார் பஸ்ஸின் முன்னால் சென்று கொண்டிருந்தது.
கடலூர் அருகே பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தபோது, ஓட்டுநர் அதிக ் லசத்தத்துடன் பஸ் ஓட்டினார். இதனால் ஆத்திரமடைந்த சேரன், நடுரோட்டில் காரை நிறுத்தி, பஸ் ஓட்டுநரிடம் சென்று “பொறுமையாக வந்தால் என்ன, அனைவரும் இந்த சாலையிலேயே பயணம் செய்ய வேண்டும், ஏன் அதிக சத்தம்?” என்று கேள்வி எழுப்பினார். சாலையில் ஒதுங்குவதற்கு வழியில்லாததால், இப்படியான ஒலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு, ஓட்டுநரும் வாக்குவாதம் செய்தார். வெறுப்படைந்த சேரன், இதுபோன்ற ஓட்டுநர்களின் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது, மற்றும் சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவியது. பொதுமக்கள் இந்த சாலையில் பஸ்கள் வேகமாக செல்லுவதோடு, அதிகமாக ஹாரன் அடிக்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.