தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை அடைந்த ‘படையப்பா’ படத்தை மீண்டும் வெளியிடுவது குறித்து நடிகர் ரஜினிகாந்துடனான சந்திப்பை முடித்துவிட்டு திரும்பியுள்ளார், அந்த படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன். ‘படையப்பா’ ரீ-ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், அவர் சமீபத்திய பேட்டியில் பல அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

“ரஜினி சார் எப்போதும் ஒரே மாதிரிதான். அன்னிக்கு எப்படி எளிமையாக இருந்தாரோ, இப்பவும் அப்படியே இருக்கிறார். அவரிடம் எனக்கு பிடித்தது அவரது எளிமையே. நாமெல்லாம் அவருடன் இருந்து கற்றுக்கொண்டபோதும், மாற்றமடைவோம். ஆனால் அவர் எப்போதும் மாறாதவர். அவருடைய மனசு எப்போதும் மாறாது,” என்று அவர் கூறினார்.

யாருக்காக இருந்தாலும் எழுந்து நின்று வரவேற்கின்றது, உபசரிப்பது போன்ற அவ்விதமான எல்லாவற்றையும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அந்த எளிமையால்தான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். நான் ‘படையப்பா’ ரீ-ரிலீஸ் பற்றிப் பேச சென்றபோதும் ரொம்ப இனிமையாக வரவேற்று எளிமையாக பழகினார். அந்த சந்திப்பில் நிறைய விஷயங்கள் பேசினோம்” என்றார். ரீ-ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது பற்றிய தகவலையும் அவர் பகிர்ந்தார்.

’’’படையப்பா’ முதன்முதலில் வெளியானபோது, அதன் முன்னர் மெகா ஹிட் அடித்த படங்களைப் பின்னுக்குத் தள்ளியது. அதற்குக் காரணம், ரஜினி சார் நடிப்பும் ஸ்டைலும் கே.எஸ் ரவிக்குமாரின் அட்டகாசமான இயக்கமும்தான். இப்போ ரீ-ரிலீஸ் செய்தால் 2கே கிட்ஸும் கொண்டாடுவார்கள்,’’ என அவர் கூறினார்.

“ஒரே ஒரு வருத்தம்தான் இருக்கிறது. ‘படையப்பா’ படத்தில் நடித்த சிவாஜி சார், மணிவண்ணன் சார், செளந்தர்யா மேடம் ஆகியோர் இப்போது நம்முடன் இல்லை. அவர்களின் சிறப்பான நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்தது. மூன்று பேரின் இழப்பு திரைத்துறைக்கு பேரிழப்பு. அவர்கள் உயிரோடு இருந்தால், ரீ-ரிலீஸ் நேரத்தில் மக்கள் கொண்டாடுவதைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார்கள். அதுமட்டும்தான் குறை. ‘படையப்பா’ இனியும் புதுப்படம் போலவே கலெக்ஷன் கொடுக்கும். சவுண்ட், பிக்சர் போன்றவற்றை இப்போதைய தொழில்நுட்பத்திற்கேற்றவாறு டிஜிட்டலைஸ் செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்களில், உலகம் முழுவதும் ‘படையப்பா’வை ரீ-ரிலீஸ் செய்யப்போகிறோம்” என்றார்.