ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து, ராம்சரண், தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் இந்த படம், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு, ராம்சரண் நடிக்கும் 16வது படம் துவங்க உள்ளது. இந்த படத்தை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்குகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதியை அணுகியபோது, அவர் அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.
புச்சி பாபு சனா, 2021ல் உப்பென்னா திரைப்படத்தை இயக்கிய போது, கதாநாயகி கிர்த்தி ஷெட்டியின் தந்தையாக விஜய்சேதுபதியை நடிக்க வைத்தவர் ஆவார். ஆனால், ராம்சரண் படத்திலும், விஜய்சேதுபதிக்கு ராம்சரணின் தந்தை கதாபாத்திரத்தை அளிக்கவே திட்டமிட்டிருந்தார். தொடர்ந்து இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்தால், அவர் மீண்டும் மீண்டும் அதே போன்ற கதாபாத்திரங்களுக்குத் தான் அணுகப்படுவார் என்ற காரணத்தால், அந்த வேடத்தை விஜய்சேதுபதி மறுத்துவிட்டாராம்.
இதற்கு பதிலாக, “வித்தியாசமான கதாபாத்திரம் என்றால், சொல்லுங்கள்; நிச்சயம் நான் நடிப்பேன்,” என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, விஜய்சேதுபதிக்கு பதிலாக, அந்த கதாபாத்திரத்தில் சிவராஜ் குமாரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.