டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் பூஜை தீபாவளி பண்டிகையான அக்டோபர் 31 அன்று சென்னையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அவர் தனது அடுத்தப் படத்தை துவங்கியுள்ளார்.
எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துவருகிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்தும் நாயகன் ராம் பிரசாதும் இருவரும் மருத்துவர் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவுப் பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின் ஆர் பணியாற்றுகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெற உள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.