நடிகர் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் நடிகர்கள் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் சமீபத்தில் நடத்தப்பட்டது.
அப்போது பேசிய பா.ரஞ்சித், நடிகை மாளவிகா மோகனன் குறித்து தமக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தாலும், படத்தில் அவருக்கு ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்த சூழலில் அதை அவர் எவ்வாறு எதிர்கொள்வார் என்ற சந்தேகம் தமக்கு இருந்ததாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதனிடையே படத்தின் ஒரு ஆக்ஷன் காட்சிக்காக கம்பு சுழற்ற வேண்டிய மாளவிகா மோகனனுக்கு அது சரியாக வராத நிலையில் தன்னுடைய சந்தேகம் மேலும் அதிகரித்ததாகவும் ஆனாலும் தொடர்ந்து மாளவிகா பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பயிற்சி செய்ததால் அவருக்கு கையில் வலி ஏற்பட்டு அவர் அழுதுவிட்டதாகவும் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மாளவிகா இதுகுறித்து தமக்கு வெளிப்படுத்தாத நிலையில், தான் எப்படி இவ்வளவு கொடூரமாக அவரிடம் நடந்து கொண்டேன் என்று தமக்கு தெரியவில்லை என்றும் பா.ரஞ்சித் மேலும் கூறியுள்ளார்.