மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வாழை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், “‘கொட்டுக்காளி’, ‘வாழை’ ஆகிய இரண்டு படங்களுமே முக்கியமானவை. தமிழ்நாட்டை உணர வேண்டும் என்றால் ‘வாழை’ படத்தை பாருங்கள். 6 வயது குழந்தையிடமும், 8 வயது குழந்தையிடமும்தான் உண்மை இருக்கும். அதனை மாரி செல்வராஜ் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். அம்மா, அக்கா, தங்கை இவர்களைத் தாண்டி இன்னொரு உறவு என்றால் டீச்சர்தான். இந்தியாவில், டீச்சர் மற்றும் குழந்தைக்கு இடையிலான உறவை மாரி அழகாக கொண்டுவந்துள்ளார்.
ஆனால், ஒரு வருத்தம் என்னவென்றால், டீச்சர் கதாபாத்திரம் மலையாளத்திலிருந்து கொண்டு வந்துள்ளனர். தமிழ்நாட்டில் டீச்சர்கள் இல்லை போல. அதேசமயம், டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த நிகிலா விமல் அருமையாக நடித்துள்ளார். கலையரசனும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். மெக்சிகோவில் வாழை இருந்தால் அங்கும் இப்படம் கனெக்ட் ஆகும்.
‘கொட்டுக்காளி’ பட விழாவில் பேசியதை பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், இம்முறை மேடையில் நான் நாகரிகமாகவே பேசியிருக்கிறேன். நான் சரக்கு அடித்து பேசுவதாக சொல்கிறார்கள். நான் ரொம்பவே சந்தோஷமாகவும், வருத்தமாகவும் இந்த மேடையை விட்டு இறங்குகிறேன். ஏனெனில் யாருக்கும் எந்த கன்டென்ட்டும் கொடுக்கவில்லை. ஆனால் சரக்கு அடிப்பதை விட்டு இப்போது ஒர்க் அவுட் செய்துகொண்டிருக்கிறேன். கண்டிப்பாக சிக்ஸ் பேக் வைத்த இயக்குநராக மாறுவேன்” என்றார்.