‘சூரரை போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய வெற்றிப் படங்களுக்கு பின்னர் சூர்யா தற்போது ‘கங்குவா’ என்ற புதிய படத்தில் பணிபுரிந்து வருகிறார். மிகுந்த பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் பணிகள் உள்ளதால், ஹாலிவுட் கலைஞர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
நடிகர் சூர்யா, கடைசியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் 2021ஆம் ஆண்டு வெளியானது. இது வசூலில் வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. அதன் பின்னர் 2022ஆம் ஆண்டு ‘விக்ரம்’ படத்தில் கேமியோ வேடத்தில் நடித்தார். அதேபோல், மாதவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ராக்கட்டரி’ படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஹீரோவாக நடித்து எந்த திரைப்படமும் வெளியாகவில்லை, இதனால் சூர்யாவின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 44’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார், சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களுடைய 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்பதை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இணைந்துள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளது.
அதேபோல், படத்தில் இணையவுள்ள மற்ற பிரபலங்கள் பற்றிய தகவல்களும் விரைவில் வெளியிடப்படும். குறிப்பாக, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே கசிந்துள்ளது. அதன்படி, சூர்யாவிற்கு வில்லனாக இயக்குனரும் நடிகருமான உறியடி விஜயகுமார் நடிக்க உள்ளார். அவர் கதையை கேட்டபோது பிடித்து போய், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.