கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி திரையுலகில் பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என பல முகங்களை கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார். பல படங்களுக்கு பாடல்களை எழுதி வரும் மதன் கார்க்கி தற்போது ‘முடிவிலி’ என்ற புதிய இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

இதைப் பற்றி பகிர்ந்த மதன் கார்க்கி, நான் உருவாக்கியுள்ள ‘முடிவிலி’ ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. காதல் சார்ந்த பாடல்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் கிராமிய காதல், நகர காதல் என முழுவதும் காதலை மையமாகக் கொண்டு ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆல்பத்திற்கு நானே இசையமைத்துள்ளேன். ஆல்பத்தில் சிறப்பு அம்சமாக பாடகர்கள் பாடவில்லை. முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் 10 பாடல்களையும் உருவாக்கியுள்ளேன். தமிழகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் முழு இசை ஆல்பம் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

வருகிற 26-ந் தேதி ஸ்பாடிபை மற்றும் சில வலைதளங்களில் இந்த இசை ஆல்பம் வெளியாகிறது. என் தந்தை வைரமுத்து ஆல்பத்தை கேட்டு விட்டு நன்றாக பாராட்டினார். மேலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி இருப்பது பற்றி வியந்து கேட்டார். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஆபத்து கிடையாது. கிராமபோன் வரும்போது பாடகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
எதிர்ப்புகளை மீறி கிராமபோன் அறிமுகமானது. ஏ.ஐ. தொழில்நுட்பம் தவிர்க்க முடியாதது. ஆனால் எல்லாவற்றையும் அதில் செய்ய முடியாது. அதற்கும் மனிதன் தேவைப்படுகிறான். மனிதனின் கட்டளைப்படி தான் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எதையும் உருவாக்க முடியும். புதிதாக அனிமேஷன் கிராபிக்ஸ் பணிகளுக்கு அடையாறில் ‘பா’ என்ற பெயரில் ஸ்டுடியோ தொடங்கியுள்ளேன். திரைப்படங்களுக்கான கிராபிக்ஸ் பணிகள் இங்கு நடைபெறுகிறது. புராண கதையில் இந்தியில் உருவாகும் கர்ணா படத்துக்கு வசனம் எழுதியுள்ளேன். படத்தில் சூர்யா, ஜான்வி கபூர் இணைந்து நடிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.